/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அதிகரித்து வரும் வெயிலால் தேயிலை உற்பத்தி... 50 சதவீதம் குறையும்!நீர் நிலைகளில் தண்ணீர் குறைவதாலும் பாதிப்பு
/
அதிகரித்து வரும் வெயிலால் தேயிலை உற்பத்தி... 50 சதவீதம் குறையும்!நீர் நிலைகளில் தண்ணீர் குறைவதாலும் பாதிப்பு
அதிகரித்து வரும் வெயிலால் தேயிலை உற்பத்தி... 50 சதவீதம் குறையும்!நீர் நிலைகளில் தண்ணீர் குறைவதாலும் பாதிப்பு
அதிகரித்து வரும் வெயிலால் தேயிலை உற்பத்தி... 50 சதவீதம் குறையும்!நீர் நிலைகளில் தண்ணீர் குறைவதாலும் பாதிப்பு
ADDED : ஏப் 23, 2024 02:19 AM

குன்னுார்;'நீலகிரியில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால், ஊட்டி, குந்தா பகுதிகளில், 50 சதவீத தேயிலை உற்பத்தி பாதிக்கும்,' என, உபாசி வேளாண் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு வழக்கத்தைவிட வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. குன்னுார் பகுதிகளில் இதுவரை இல்லாத அளவு, 27 டிகிரி செல்சியஸ் முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை உயர்ந்துள்ளது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் தேயிலை செடிகள் பாதித்து வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு குன்னுாரில் அதிகபட்சமாக, 9.3 செ.மீ., மழையளவு பதிவானது. இதனால் குன்னுார் கோத்தகிரி பகுதிகளில் பசுந்தேயிலை வளர்ச்சி ஓரளவு பாதிக்காமல் உள்ளது.
அதே நேரத்தில் ஊட்டி குந்தா பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதால் பசுந்தேயிலை பாதித்து வருகிறது. மகசூல் குறைந்து வருவதால், சில இடங்களில் விவசாயிகள் ஸ்பிங்ளர் மற்றும் தெளிப்பான் மூலம் நீர் பாய்ச்சி வருகின்றனர்.
உபாசி வேளாண் ஆராய்ச்சி மைய உதவி இயக்குனர் முருகேசன் கூறுகையில், ''குன்னுார், கோத்தகிரி பகுதிகளில் கிடைத்த கோடை மழை பசுந்தேயிலை பாதுகாப்புக்கு பயனுள்ளதாக அமைந்தது. எனினும் தொடர்ந்து காணப்படும் வெயிலின் தாக்கத்தால் மகசூல் பாதித்துள்ளது.
அதே நேரத்தில் ஊட்டி குந்தா பகுதிகளில் மழையின் தாக்கம் கடந்த இரண்டு மாதங்களாக இல்லை.
சமீபத்தில் குன்னுாரில், 30 டிகிரி செல்சியஸ் அதிகபட்சமாக வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இப்பகுதியில், நீர்நிலைகளும் வறண்டு வருவதால் தேயிலை செடிகளுக்கு நீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பசுந்தேயிலை செடிகள் மிகவும் பாதிக்கப்பட்டு பயனில்லாத நிலைக்கு மாறி வருகிறது. சிவப்பு சிலந்தி நோய் தாக்குதலும் அதிகரித்துள்ளது.
இதே நிலை தொடர்ந்தால், ஊட்டி, குந்தா போன்ற பகுதிகளில், 50 சதவீத தேயிலை உற்பத்தி பாதிக்கும். குன்னுார்- கோத்தகிரி பகுதிகளில், 30 சதவீதத்திற்கும் மேல் தேயிலை உற்பத்தி பாதிக்கும். சிவப்பு சிலந்தி நோய் தாக்குதலை கட்டுப்படுத்த வாரந்தோறும் மருந்து தெளித்து பாதுகாக்கலாம்,'' என்றார்.

