ADDED : நவ 27, 2025 04:40 AM

பந்தலுார்: பந்தலுார் அருகே தேவாலா பகுதியில், பொதுமக்கள் போராட்டத்தை தொடர்ந்து 'சீல்' வைக்கப்பட்ட தார் கலவை ஆலை, நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து திறந்து செயல்பட துவங்கியது.
பந்தலுார் அருகே தேவாலா பகுதியில் பி.ஆர்.சி.சி., எனும் பெயரில் தார் கலவை ஆலை பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
தார்க்கலவை ஆலையிலிருந்து எழும் புகை மற்றும் துாசால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு, மக்கள் நோய்களால் சிரமப்படுவதாக கூறி, போக்கர் காலனி மக்கள் தொடர் போராட்டம் நடத்தனர். இந்நிலையில், கடந்த செப்., மாதம் ஆலையின் பாதுகாப்பு சுவர் இடிந்து விழுந்தது. தொடர்ந்து, 'கிராம மக்கள், பல்வேறு அரசியல் கட்சியினர் இணைந்து ஆலையை மூட வேண்டும்,' என, வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. இது குறித்து தார் கலவை ஆலை உரிமையாளர்கள் ராயின் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்தார். விசாரணைக்கு பின்னர், ஆலையில் உள்ள பொருட்களை எடுக்கவும், பராமரிப்பு பணி மேற்கொள்ளவும் கடந்த செப்., 13ல் இரண்டு நாட்கள் மட்டும் நீதிமன்றம் அனுமதி கொடுத்தது.
அதன்பின், சம்பந்தபட்ட ஒப்பந்ததாரர் ராயின், சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள டெண்டர் எடுத்துள்ள நிலையில், அந்த குறிப்பிட்ட சாலைகளை சீரமைக்கும் வகையில், டிச., 18 ம் தேதி வரை ஆலையை திறந்து செயல்பட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதனையடுத்து, நேற்று காலை ஆலை திறக்கப்பட்டு, முதல் கட்டமாக நாடுகாணி குடோன் முதல் தேவாலா ஹட்டி செல்லும் சாலை சீரமைப்பு பணி மேற்க்கொள்ளப்பட்டது. தேவாலா போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஒப்பந்ததாரர் ராயின் கூறுகையில்,' தார் கலவை ஆலையை செயல்படுத்த விடக்கூடாது என்ற நோக்கத்தில், சிலர் எனது ஆலையின் பாதுகாப்பு சுவரை இடித்து, போராட்டம் நடத்தினர். இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தற்காலிகமாக திறக்கப்பட்ட ஆலை, நீதிமன்ற வழிகாட்டுதல் படி நிரந்தரமாக திறந்து செயல்படுத்தப்படும்,'' என்றார்.

