/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பந்தலுாருக்கு தேவை பார்க்கிங் தளம்
/
பந்தலுாருக்கு தேவை பார்க்கிங் தளம்
ADDED : அக் 20, 2025 11:27 PM

பந்தலூர்; பந்தலூர் பஜார் பகுதிக்கு பார்க்கிங் வசதி இல்லாததால், பண்டிகை காலங்களில் வாகனங்கள் நிறுத்த இடம் இல்லாத நிலை தொடர்கிறது.
தாலுக்கா தலைநகரான பந்தலூர் பஜாரில் பல்வேறு அலுவலகங்கள் மற்றும் அரசு, தனியார் பள்ளிகள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், 400-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது.
மேலும் தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இணைப்பு சாலையாக உள்ளதால், அதிக அளவிலான மக்கள் மற்றும் வாகனங்கள் வந்து செல்கிறது. ஆனால் தினசரி பந்தலூருக்கு வந்து செல்லும் தனியார் மற்றும் டாக்ஸி வாகனங்கள், பண்டிகை, விழா காலங்களில் அதிகரிக்கும் வாகனங்கள் நிறுத்த இடம் இல்லாமல், சாலைகளில் நிறுத்தி செல்லும் நிலை தொடர்கிறது.
தீபாவளி பண்டிகை காலங்களில் சாலை ஓரங்களில், வியாபாரிகள் தற்காலிக கடை அமைப்பதால் சுமார் பத்து நாட்களுக்கு, இந்த இடங்களிலும் வாகனங்கள் நிறுத்த முடியாமல், வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சிரமப்படுகின்றனர். கோவில் திருவிழாக்கள் மற்றும் தீபாவளி பண் டிகை காலங்களில், டாக்ஸி மற்றும் தனியார் வாகனங் களை புதிய பஸ் ஸ்டாண்ட் வளாகத்திற்குள் நிறுத்த அனுமதிக்கப்படுகிறது.
இதனால் தமிழக கேரளா அரசு பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள், பஸ் ஸ்டாண்டில் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்ல முடியாமல் சிரமப்படுவதும் தொடர்கிறது.
ஆனால் வருவாய்த்துறை மற்றும் நகராட்சி சொந்தமான இடங்கள் அதிக அளவில் பஜார் பகுதியில் இருந்தும், அவற்றை ஆக்கிரமித்து பலரும் கடைகள் மற்றும் வீடுகள் கட்டி பயன்படுத்தி வருகின்றனர்.
இது போன்ற இடங்களை ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி, பார்க்கிங் மற்றும் சாலையோர வியாபாரிகளுக்கான கடைகள் அமைத்து தர நடவடிக்கை எடுக்க, பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்த போதும், நகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவு கரம் நீட்டி, கோரிக்கைகளுக்கு செவிமடுக்க மறுத்து வருகிறது.
எனவே இதுபோன்ற பாதிப்புகள் தொடர்வதை தடுக்கும் வகையில், பந்தலூர் பஜாரில் பார்க்கிங் மற்றும் சாலையோர வியாபாரிகளுக்கான கடைகள் கட்டித்தர நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

