/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குடிநீர் பற்றாக்குறையால் புதிய இணைப்பு தற்காலிகமாக நிறுத்தம்
/
குடிநீர் பற்றாக்குறையால் புதிய இணைப்பு தற்காலிகமாக நிறுத்தம்
குடிநீர் பற்றாக்குறையால் புதிய இணைப்பு தற்காலிகமாக நிறுத்தம்
குடிநீர் பற்றாக்குறையால் புதிய இணைப்பு தற்காலிகமாக நிறுத்தம்
ADDED : மார் 13, 2024 10:19 PM
பெ.நா.பாளையம் : கோடைக்காலம் தொடங்கிய நிலையில் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க, புதிய இணைப்பு தற்காலிகமாக நிறுத்த, கூடலூர் நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே கூடலூர் நகராட்சி உள்ளது. இங்குள்ள, 27 வார்டுகளில், 54 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இவர்களின் அன்றாட குடிநீர் தேவையை தீர்க்க, பில்லூர் அத்திக்கடவு குடிநீர் திட்டம் ஒன்று மற்றும் இரண்டு ஆகியவை வாயிலாக மெயின் பைப்பில் இருந்து குடிநீர் பெற்று விநியோகம் செய்யப்படுகிறது.
கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் புதிய குடியிருப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. தற்போது நாள் ஒன்றுக்கு ஒரு கோடி லிட்டர் குடிநீர் தேவைப்படும் என்ற நிலையில், தற்போது, 55 லட்சம் லிட்டர் குடிநீர் மட்டுமே பெற்று விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் கூடலூர் நகராட்சியில், பொதுமக்களின் குடிநீர் தேவையை முழுவதுமாக தீர்க்க இயலவில்லை. ஒவ்வொரு பகுதியிலும் குறைந்தபட்சம், 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்ய முடிகிறது.
இது குறித்து கூடலூர் நகராட்சி தலைவர் அறிவரசு கூறுகையில், 'கூடலூர் நகராட்சியில் ஏற்கனவே உள்ள ஆழ்குழாய் கிணறுகளோடு நேற்று முன்தினம் புதியதாக மூன்று ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இன்னும் சில நாட்களில் மேலும் ஆழ்குழாய் கிணறுகள் தேவைப்படும் இடங்களில் அமைக்க உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
தண்ணீர் சிக்கனம் தொடர்பான கருத்துக்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கவும், வாகனங்களில் ஒலிபெருக்கி வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது
புதிய குடிநீர் இணைப்பு தற்காலிகமாக நிறுத்தம்
கூடலூர் நகராட்சியில் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு வந்தன.
தற்போது குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், இதை சமாளிக்கும் பொருட்டு, வரும் நான்கு மாதங்களுக்கு புதிய குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதத்துக்கு பிறகு, தென்மேற்கு பருவமழை தொடங்கிய பின், புதிய குடிநீர் இணைப்புகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என கூறினார்.

