/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வீடு கட்டும் பணிக்கு அணை மணல்... இலவசமாக கிடைக்குமா? பசுமை வீடு திட்ட பயனாளிகள் எதிர்பார்ப்பு
/
வீடு கட்டும் பணிக்கு அணை மணல்... இலவசமாக கிடைக்குமா? பசுமை வீடு திட்ட பயனாளிகள் எதிர்பார்ப்பு
வீடு கட்டும் பணிக்கு அணை மணல்... இலவசமாக கிடைக்குமா? பசுமை வீடு திட்ட பயனாளிகள் எதிர்பார்ப்பு
வீடு கட்டும் பணிக்கு அணை மணல்... இலவசமாக கிடைக்குமா? பசுமை வீடு திட்ட பயனாளிகள் எதிர்பார்ப்பு
ADDED : மார் 15, 2024 11:16 PM

ஊட்டி:'பசுமை வீடு கட்டுமானங்களுக்கு அணை மணலை இலவசமாக தர வேண்டும்,' என, பயனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில், முதலமைச்சரின் பசுமை வீடு திட்டத்தின் கீழ், கிராம பகுதிகளில் வறுமை கோட்டிற்குக் கீழ் வாழும் வீடு இல்லாத ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் அரசால் கட்டித்தரப்படுகிறது.
'இதற்கான மொத்த செலவு ஒரு வீட்டிற்கு, 1.80 லட்சம் ரூபாய், சூரிய சக்தி விளக்கிற்காக, 30 ஆயிரம் ரூபாய்,' என, 2.10 லட்சம் ரூபாய் சம்மந்தப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது.
இதில், மலை மாவட்டமான நீலகிரிக்கு கட்டுமான பொருட்கள் வெளி மாவட்டத்திலிருந்து கொண்டுவரப்படுகிறது. கூடுதல் செலவு காரணமாக பயனாளிகள் பலர், வீடுகளை முடிக்காமல் உள்ளனர்.
கூடுதல் தொகை ஒதுக்க வேண்டும்
இந்த திட்டத்தில், 'நீலகிரி பயனாளிகளுக்கு கூடுதல் தொகை ஒதுக்க வேண்டும்,' என, ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், குந்தா, பைக்காரா மின் வட்டத்தில் உள்ள குந்தா, கெத்தை, எமரால்டு, அவலாஞ்சி அணைகளில் அதிகளவில் சகதி நிறைந்துள்ளது. இந்த அணைகளை முழுமையாக துார் வாரினால், பல ஆயிரம் டன் மணலை பயனாளிகளுக்கு இலவசமாக வழங்க முடியும்.
இதற்காக, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள், ஏற்கனவே குந்தா மின்வாரிய அதிகாரிகளை அணுகி அணையில் ஆய்வு மேற்கொண்டனர். இதில், '2,000 டன் அளவு அணை மணல் வீடு கட்ட உகந்ததாக இருக்கும்,' என, ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதை தொடர்ந்து, 'மாவட்டத்தில் உள்ள பயனாளிகளும் இந்த உதவி கிடைக்கும்,' என, பயனாளிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், ஆய்வுக்கு பின், பல ஆண்டுகளாக அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுள்ளனர். இதனால், 30 சதவீத பயனாளிகள் தங்கள் வீடுகளை கட்டி முடிக்காமல் பாதியில் விட்டுள்ளனர்.
ஊட்டியை சேர்ந்த பயனாளி செல்வன் என்பவர் கூறுகையில்,''நீலகிரிக்கான கட்டுமான செலவினங்கள் அதிகரிப்பால், பசுமை வீடு திட்டம் முழுமை பெறாமல் உள்ளது. இதற்கான தாமதத்தால் வீடுகள் சேதமடையும் அபாயம் உள்ளது. தற்போதைய நிலையில், அணை மணல் கிடைத்தால் ஓரளவுக்கு உதவியாக இருக்கும். மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

