/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பாரம்பரிய கட்டடத்தின் முன்பு 'ஹெல்ப் டெஸ்க்' நீலகிரி ஆவண காப்பகம் ஆட்சேபம்
/
பாரம்பரிய கட்டடத்தின் முன்பு 'ஹெல்ப் டெஸ்க்' நீலகிரி ஆவண காப்பகம் ஆட்சேபம்
பாரம்பரிய கட்டடத்தின் முன்பு 'ஹெல்ப் டெஸ்க்' நீலகிரி ஆவண காப்பகம் ஆட்சேபம்
பாரம்பரிய கட்டடத்தின் முன்பு 'ஹெல்ப் டெஸ்க்' நீலகிரி ஆவண காப்பகம் ஆட்சேபம்
ADDED : பிப் 19, 2024 12:46 AM

ஊட்டி:ஊட்டியில், 125 ஆண்டுகள் பழமையான பாரம்பரிய கட்டடமான, 'அசெம்ளி' திரையரங்கு அருகே, 'ஹெல்ப் டெஸ்க்' அமைப்பதற்கு ஆவண காப்பகம் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.
ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையில், 125 ஆண்டு பாரம்பரியமிக்க, 'அசெம்ளி' திரையரங்கு அமைந்துள்ளது. இந்த கட்டடம் நீலகிரியில் உள்ள ஆங்கிலேயர் கால, பாரம்பரிய பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
இவ்வகை கட்டடங்களை பாதுகாக்க ஏதுவாக, 2022ல் நடந்த, 'ஊட்டி-200' திருவிழாவுக்கு வருகை தந்த, மாநில முதல்வர் ஸ்டாலின் தனியாக நிதி ஒதுக்கினார்.
'இந்த கட்டடங்களின் அழகு பாதிக்கும் வகையில், இதன் அருகிலோ; முன்பாகவோ எவ்வித கட்டுமான பணிகள்; தற்காலிக குடில்கள் அமைக்க கூடாது,' எனவும் அறிவுறுத்தினார்.
இந்நிலையில், மாவட்ட காவல்துறை சார்பில் திரையரங்கு முன், சுற்றுலா பயணிகளுக்கான 'ஹெல்ப் டெஸ்க்' அமைக்கும் பணிகள் நடந்து வருவதால், திரையரங்கின் தோற்றத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உள்ளூர் பொது மக்கள் இதனால் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
நீலகிரி ஆவண காப்பக இயக்குனர் தர்மலிங்கம் வேணுகோபால் கூறுகையில், ''நீலகிரியில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டு பாதுகாக்கப்படும் பாரம்பரிய கட்டங்களின் முன், எவ்வித பணிகள் நடந்தாலும், அதற்கு மாநில கவர்னரின் அனுமதி பெற வேண்டும் என்பது விதி முறையாகும். 125 ஆண்டு பாரம்பரியமிக்க திரையரங்கு, சமீபத்தில் பல லட்சம் ரூபாய் செலவில் அழகுபடுத்தப்பட்டது.
சமீபத்தில் இப்பகுதியில் அமைக்கப்பட்ட ஏ.டி.எம்., மையம் மக்கள் ஆட்சேபனையால் உடனடியாக மாற்றப்பட்டது. இந்நிலையில், 'ஹெல்ப் டெஸ்க்' அமைக்கும் பட்சத்தில், கட்டடத்தின் அழகு பாதிக்கப்படும். மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து, இதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

