/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கிராமத்து நீரோடையில் தண்ணீர் இருந்தும் குடிக்க, குளிக்க முடியாது! கோடையில் தவிக்கும் மண்ணின் மைந்தர்கள்
/
கிராமத்து நீரோடையில் தண்ணீர் இருந்தும் குடிக்க, குளிக்க முடியாது! கோடையில் தவிக்கும் மண்ணின் மைந்தர்கள்
கிராமத்து நீரோடையில் தண்ணீர் இருந்தும் குடிக்க, குளிக்க முடியாது! கோடையில் தவிக்கும் மண்ணின் மைந்தர்கள்
கிராமத்து நீரோடையில் தண்ணீர் இருந்தும் குடிக்க, குளிக்க முடியாது! கோடையில் தவிக்கும் மண்ணின் மைந்தர்கள்
ADDED : மார் 20, 2024 09:45 PM

பந்தலுார் : பந்தலுார் அருகே புத்துார்வயல் பழங்குடியின கிராமத்தின் நீரோடையில் தண்ணீர் இருந்தும், குடிக்கவும், குளிக்கவும் முடியாமல் பழங்குடியின மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
பந்தலுார் நெலாக்கோட்டை ஊராட்சியின் பெரும்பாலான வார்டுகளிலும், மக்களின் அடிப்படை தேவைகள் இதுவரை எட்டாக்கனியாக உள்ளது. தேர்தலில் வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதிகளும், இது குறித்து கண்டு கொள்ளாத நிலையில், அரசு அதிகாரிகளை சந்தித்து 'மனுபோர்' நடத்தியும் பயனில்லை.
தேர்தல் நேரங்களில் கிராமங்களுக்கு வரும் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசி செல்வதோடு தங்கள் கடமையை நிறைவு செய்து கொள்கின்றனர். இதனால், அடித்தட்டு மக்கள் அடிப்படை வசதிகளுக்காக ஏங்கி தவிப்பது தொடர்கிறது.
பழங்குடிகளுக்கு விடிவில்லை
அதில், நெலாக்கோட்டை ஊராட்சியின், 12வது வார்டுக்கு உட்பட்ட, புத்துார் வயல் பழங்குடியின கிராமம் நீரோடையை ஒட்டி அமைந்து உள்ளது. இங்கு பத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில், இவர்களின் கிராமத்தை சுற்றிலும் பிற சமுதாய மக்கள் வாழ்ந்து வருகின்றனர். பழங்குடியின கிராம மக்கள் பயன்படுத்தும் வகையில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர், அமைக்கப்பட்ட குடிநீர் கிணறு நீரை குடிக்க முடியாத நிலையில் மிகவும் மாசடைந்து மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது.
குடிநீர் இல்லாத அவலம்
இங்கு வாழும் மக்களுக்காக, பொது குடிநீர் கிணற்றிலிருந்து, குடிநீர் சப்ளை செய்ய பயன்பட்ட குழாய்களும், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், ஊராட்சி நிர்வாகம் மூலம் அகற்றி எடுத்து செல்லப்பட்டது.
இதனால், கிராம மக்கள் அருகில் உள்ள தனிநபர் கிணறுகளில் தண்ணீரை எடுத்து பயன்படுத்தி வரும் நிலையில், கோடையால் அந்த கிணறுகளும் வறண்டு போனதால், குடிப்பதற்கு குடிநீர் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
கிராமத்தின் நீரோடையில் தண்ணீர் இருந்தும், அதில் கோழி கழிவுகள், குடியிருப்புகளின் கழிப்பிட கழிவுகளும் தேங்கி கிடப்பதால், நீரோடை தண்ணீரை குளிப்பதற்குகூட பயன்படுத்த முடி யாத சூழ்நிலை உள்ளது.
மவுனம் காக்கும் ஊராட்சி
இவர்களின் நிலை குறித்து, பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் கூறியும், பழங்குடியினர் என்பதால், உள்ளாட்சி உறுப்பினர்கள் முதல் அதிகாரிகள் வரை யாரும் கண்டுகொள்ள மறுத்து வருகின்றனர்.
குடிப்பதற்கு குடிநீர் கூட கிடைக்காமல் மண்ணின் மைந்தர்கள் சிரமப்பட்டு வருவது, ஆட்சியாளர்கள் முதல் அரசு நிர்வாகங்களின் உயர் அதிகாரிகளின் பார்வைக்கு வந்து, எப்போது தீர்வு கிடைக்குமோ என்ற ஏக்கத்தில் இவர்கள் காத்து கிடக்கின்றனர்.
பழங்குடியின மக்கள் கூறுகையில், 'கோடை காலம் துவங்கி மழையும் வராமல் போனதால், குடிப்பதற்கும்; குளிப்பதற்கும் தண்ணீர் கிடைக்காமல் அவதி அடைந்து வருகிறோம். ஆற்றில் தண்ணீர் இருந்தும் கழிப்பிட கழிவுகள் தேங்கி கிடக்கின்றன.
மழை வராமல், கிணற்றில் தண்ணீர் வற்றினால், கழிப்பிட கழிவுகள் நிறைந்த ஆற்று நீரில் குளிக்க நேரிடும். அதற்குள்ளாவது, மாவட்ட நிர்வாக அதிகாரிகள் ஆய்வு செய்து தீர்வு ஏற்படுத்தினால், உடலும், உள்ளமும் சுத்தமாகும்,' என்றனர்.

