/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரசாரம்
/
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரசாரம்
ADDED : பிப் 25, 2024 10:44 PM

பெ.நா.பாளையம்:நரசிம்மநாயக்கன்பாளையத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த பிரசாரம் நடந்தது.
மத்திய அரசு சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை உதவியுடன், தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையுடன் இணைந்து பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில், பிரசார குழு மினி பஸ் வாயிலாக, 20 இடங்களில் பிரசாரம் நடத்தியது. பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் வாயிலாக, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், திடக்கழிவு மேலாண்மை, நீர் பாதுகாப்பு, ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களை தவிர்த்தல், காலநிலை மாற்றம் பல்லுயிர் பெருக்கம், மண்வளம் மற்றும் இயற்கை வளம் காத்தல் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி துாக்கி எறியப்படும் பிளாஸ்டிக் கப், டீ கப், குப்பைக் கழிவுகளால், இயற்கை வளம் பாதிப்பதோடு, வருங்கால சந்ததியினரும் பாதிக்கப்படுவர். எனவே, பாரம்பரிய முறையில் சில்வர் டம்ளர், கண்ணாடி டம்ளர், தட்டு, வாழை இலை இவற்றை பயன்படுத்த வேண்டும் என, விழிப்புணர்வு ஏற்படுத்தினர். துணி பைகளை பயன்படுத்த வேண்டும் என்றனர். மேலும், சுற்றுச்சூழல் கருத்துக்கள் அடங்கிய துண்டு பிரசுரம் மற்றும் துணிப்பை ஆகியவற்றையும் வழங்கினர்.

