பொது இடங்களில் குப்பைகளை வீசி எறிந்தால் அபராதம் நிச்சயம்! ஊட்டி நகராட்சி நிர்வாகம் மக்களுக்கு எச்சரிக்கை
பொது இடங்களில் குப்பைகளை வீசி எறிந்தால் அபராதம் நிச்சயம்! ஊட்டி நகராட்சி நிர்வாகம் மக்களுக்கு எச்சரிக்கை
UPDATED : செப் 16, 2026 05:23 PM
ADDED : செப் 16, 2026 04:32 PM

ஊட்டி: 'ஊட்டியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை மேம்படுத்தும் விதமாக, பொது மக்கள் குப்பைகளை நான்கு வகைகளாக பிரித்து வழங்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட திடக்கழிவு மேலாண்மை விதிகள், கடந்த ஏப்., 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, 'குப்பையை வார்டு பகுதிகளில் வாங்கும் போது , நான்கு வகையாக பிரித்து வாங்க வேண்டும்,' என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
செயல்படுத்த நடவடிக்கை இதனை, 'சுற்றுலா மையமான ஊட்டியில் முழுமையாக செயல்படுத்த வேண்டும்,' என, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து, நகராட்சியின், 36 வார்டு மக்களுக்கும் இதன் விதிகளை தெரிவிக்கும் வகையில், ஊட்டி நகராட்சி அலுவலகத்தில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம், நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதி தலைமையில் நடந்தது.
கூட்டத்தில், 'தினசரி வீதிகளில் வாகனங்களில் வரும் துாய்மை பணியாளர்களிடம் காய்கறி , பழத்தோல்கள் , உணவு பொருட்கள் போன்ற மட்கும் குப்பைகளை தனியாகவும் , பிளாஸ்டிக் , கண்ணாடி போன்ற மட்காத பொருட்களை தனியாகவும், ரப்பர் , துணி வகைகளை தனியாகவும் , மருத்துவ கழிவுகளை தனியாகவும், நான்கு வகைகளாக தரம் பிரித்து வாங்க வேண்டும்,' என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டு பணிகள் துவக்கப்பட்டுள்ளன.
மக்களின் ஒத்துழைப்பு தேவை நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதி கூறுகையில்,'' அரசின் விதிகளின் படி , வீடுகள் , வணிக பகுதிகள் , பள்ளிகள் , கல்லுாரிகள் , தொழிற்சாலைகள் , சந்தை பகுதிகள் , தெருவோர வியாபாரிகள் என , அனைத்து தரப்பினரும், 'மட்கும் குப்பை ,மட்காத குப்பை , சுகாதார குப்பை , சிறப்பு பராமரிப்பு குப்பை ( அபாயகரமான குப்பை ),' என ,நான்கு வகைகளாக பிரித்து, நகராட்சி குப்பை வாகனங்களில் மட்டுமே கொடுக்க வேண்டும். பிரித்து கொடுக்காத வீடுகள், வணிக பகுதிகளில், குப்பைகள் பெறப்பட மாட்டாது. இந்த விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும். இதற்கான தொகை விரைவில் அறிவிக்கப்படும்.
மேலும், கழிவு நீர் கால்வாய்கள், பொது இடங்கள், தெருக்கள், அனைத்து மத வழிபாட்டு தளங்கள் அமைந்துள்ள பகுதிகள் மற்றும் ஆறுகள், நீர் நிலை பகுதிகள் , பஸ் ஸ்டாண்ட் , ரயில் நிலையங்கள் போன்ற பகுதிகளில் குப்பைகளை வீசி எறிய கூடாது. மீறிவோருக்கு, அபராதம் மட்டுமல்லாமல் சட்டபடியான நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, இந்த திட்டத்தை சுற்றுலா நகரில் முழுமைப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்,'' என்றார்.
