/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்ட வேண்டும்'
/
'பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்ட வேண்டும்'
ADDED : மார் 20, 2024 10:25 PM

மேட்டுப்பாளையம், : நெல்லித்துறைக்கும், பில்லூர் அணைக்கும் இடையே, பவானி ஆற்றில் புதிதாக அணை கட்ட வேண்டும் என, விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
பவானி ஆற்று நீர்ப் பாசன விவசாயிகள் சங்க கூட்டம், ஆலாங்கொம்பில் நடந்தது. கூட்டத்துக்கு தலைவர் துரைசாமி தலைமை வகித்தார். செயலாளர் திப்பையன் வரவேற்றார். துணைத் தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் சங்கத் தலைவர் துரைசாமி பேசியதாவது: பில்லூர் அணையிலிருந்து, பவானி ஆற்றில் திறந்து விடும் தண்ணீரின் சராசரி அளவு, 70 டி.எம்.சி.,ஆகும். ஆனால் மழைக்காலங்களில் வரும் காட்டாறு வெள்ளம் சேர்த்து, 80 லிருந்து, 100 டி.எம்.சி., தண்ணீர் வரை, பவானி ஆற்றின் வழியாக பவானிசாகர் அணைக்கு செல்கிறது.
அதேபோன்று மேட்டுப்பாளையம் பகுதியில் பெய்யும் சராசரி மழை அளவு, ஏழு டி.எம்.சி., என வருவாய்த்துறை கணக்கிட்டுள்ளது. ஆனால், 20 டி.எம்.சி., வரை மழை பெய்கிறது என, தனியாக அளவு எடுக்கப்பட்டு உள்ளது.
பூமியில் தண்ணீர் குடித்தது போக, ஏழு டி.எம்.சி., தண்ணீர் பவானி ஆற்றுக்கு செல்கிறது. ஆற்றில் வரும் தண்ணீரை தேக்கி வைத்து மின்சாரம் உற்பத்தி செய்யவும், கோடை காலத்தில் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, நெல்லித்துறைக்கும், பில்லூர் அணைக்கும் இடையே, பவானி ஆற்றின் குறுக்கே பெரிய அணை கட்ட, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களாவது: பவானி ஆறு பல கோடி மக்களின் குடிநீர் ஆதாரமாக இருந்து வருகிறது. மழை காலத்தில் தண்ணீர் வீணாக, பவானிசாகர் அணைக்கு செல்கிறது. எனவே பவானி ஆற்றின் குறுக்கே பெரிய அணை கட்டி, தண்ணீரை தேக்கி வைக்க, தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்த தீர்மானங்களை தமிழக முதல்வருக்கும், நீர் பாசன துறை அமைச்சர் மற்றும் மாவட்ட கலெக்டருக்கும் அனுப்ப முடிவு செய்துள்ளனர். கூட்டத்தில் விவசாயிகள் சங்க செயற்குழுவினர் பங்கேற்றனர். துணைச் செயலாளர் பழனிசாமி நன்றி கூறினார்.

