/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஓட்டு கேட்டு சென்றவர்களை விரட்டிய பழங்குடிகள்
/
ஓட்டு கேட்டு சென்றவர்களை விரட்டிய பழங்குடிகள்
ADDED : ஏப் 02, 2024 10:33 PM
பந்தலுார்;பந்தலுார் அருகே, பிதர்காடு பகுதியில் ஆனப்பஞ்சோலா கிராமத்துக்கு பிரசாரத்திற்கு சென்றவர்களை பழங்குடியினர் விரட்டி விட்டனர்.
பந்தலுார் அருகே பிதர்காடு பகுதியில் ஆனப்பஞ்சோலா பழங்குடியின கிராமம் உள்ளது. இங்கு, 10 பழங்குடியின குடும்பத்தினர் குடியிருந்து வருகின்றனர். இவர்களுக்கு சாலை, தெருவிளக்கு, குடியிருப்பு மற்றும் குடிநீர் குழாய் இணைப்பு உள்ளிட்ட எந்த வசதிகளும் இதுவரை ஏற்படுத்தி தரவில்லை.
இது குறித்து கிராம மக்கள் பலமுறை அரசியல் கட்சி தலைவர்களிடம் வலியுறுத்தியும் யாரும், கண்டு கொள்ளவில்லை.
இந்நிலையில், நேற்று அ.தி.மு.க., கூட்டணி லோக்சபா வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் மற்றும் பலர் அங்கு ஓட்டு கேட்டு கிராமத்திற்கு சென்றனர். அங்கு இருந்த பழங்குடியின மக்கள், 'எந்த வசதிகளும் செய்து தராமல் எதற்கு ஓட்டு கேட்டு வருகிறீர்கள்,' என, கூறி கிராமத்தை விட்டு துரத்தியுள்ளனர்.
கட்சியினர் அவர்களை சமாதானப்படுத்தியும் ஏற்காத பழங்குடியின மக்கள், 'எங்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணாத வரையில் எந்த அரசியல் கட்சிகளும் ஊருக்குள் ஓட்டு கேட்டு வரக்கூடாது. நாங்கள் யாருக்கும் ஓட்டு போட போவதில்லை,' என, கூறியதால் அனைவரும் திரும்பி வந்தனர்.
இது போன்று, பல்வேறு கிராமங்களிலும் பிரச்னைகள் உள்ளதால், 'பழங்குடியின கிராமங்களுக்கு ஓட்டு கேட்டு செல்லலாமா; வேண்டாமா,' என, பிற அரசியல் கட்சியினர் ஆலோசித்து வருகின்றனர்.

