/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
உள்வாடகைக்கு விடப்பட்ட 'கைரளி' கடைக்கு பூட்டு
/
உள்வாடகைக்கு விடப்பட்ட 'கைரளி' கடைக்கு பூட்டு
ADDED : மார் 22, 2024 10:20 PM

ஊட்டி:நீலகிரி கூட்டுறவு நிறுவனத்திற்கு சொந்தமான கடையை உள்வாடகைக்கு விட்ட விவகாரத்தை தொடர்ந்து, நிறுவன ஊழியர்கள் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில், நீலகிரி கூட்டுறவு நிறுவனத்திற்கு சொந்தமான கட்டடம் அமைந்துள்ளது. இந்த கட்டடத்தில், கேரள அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 'கைரளி' ஷோரூம் செயல்பட்டு வருகிறது.
இதில் உள்ள கடையை இரண்டாக பிரித்து, ஒரு பகுதியில் கூட்டுறவு நிறுவனத்தின் அனுமதி இல்லாமல், வெளி வியாபாரிகளுக்கு உள்வாடகை விடப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கூட்டுறவு நிறுவன ஊழியர்கள் நேற்று திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து போலீசார் வந்து அவர்களை சமாதானப்படுத்திய போது, கடைக்கு பூட்டு போட அவர்கள் வலியுறுத்தினர். அதன்பின், பூட்டு போடப்பட்டது.
தொடர்ந்து, ஊட்டி பி--1காவல் நிலைய எஸ்.ஐ., சுரேஷ்குமார் முன்னிலையில் காவல் நிலையத்தில் இருதரப்பினரிடையேயும், பேச்சு வார்த்தை நடந்தது.
இது குறித்து, கூட்டுறவு நிறுவன மேலாளர் ராணி கூறுகையில்,'' கைரளி நிறுவனம், 13 லட்சத்து, 58 ஆயிரத்து, 381ரூபாய் வாடகை பாக்கி வைத்துள்ளது. இந்த தொகையை செலுத்தாமல், கூட்டுறவு நிறுவனத்தின் அனுமதி பெறாமல், கடையை பிரித்து, உள் வாடகைக்கு கொடுத்துள்ளனர்.
அத்துடன், பிரச்னையில் ஈடுபட்டனர். இதனால், கூட்டுறவு நிறுவன ஊழியர்களுக்கு பாதுகாக்கப்பற்ற சூழ்நிலை உருவாகி உள்ளது. இப்பிரச்னை குறித்து, காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, உள் வாடகைக்கு விடப்பட்ட கடை மற்றும் அருகில் உள்ள கைரளி கடையையும் பூட்டிய போலீசார் சாவியை எடுத்து சென்றுள்ளனர்,'' என்றார்

