/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அரசின் சிறிய பஸ்களில் பயணிகள் செல்ல சிரமம்
/
அரசின் சிறிய பஸ்களில் பயணிகள் செல்ல சிரமம்
ADDED : ஏப் 03, 2024 10:20 PM
குன்னுார் : நீலகிரியில் கிராமங்களுக்கு புதியதாக கொண்டு வந்த அரசு பஸ்களில் இருக்கைகள் குறுகலாக இருப்பதால் பயணிகள் சிரமப்படுகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் சிறப்பு மலைப்பகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், 8.32 கோடி ரூபாய் மதிப்பில், 16 புதிய சிறியரக அரசு பஸ்களை கடந்த பிப் மாதம், 26ம் தேதி போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்.
இந்த பஸ்களில் இரு புற இருக்கைகளுக்கு நடுவில் பயணிகள் நடந்து செல்ல வழி மிகவும் குறுகலாக உள்ளது. கடைசியில் இருக்கும் இருக்கையும், 3 பேர் அமர கூடியதாக மட்டும் உள்ளது. கண்டக்டர் இருக்கையும் இல்லை.
இது தொடர்பாக. லஞ்சம் இல்லாத நீலகிரி அமைப்பு ஒருங்கிணைப்பாளர் மனோகரன் கூறுகையில், ''பஸ்சிற்குள் மிக குறுகலாக இருப்பதால், பயணிகள் பைகளுடன் செல்ல முடிவதில்லை. பள்ளி மாணவ, மாணவியரும் புத்தக சுமையுடன் செல்ல சிரமப்படுகின்றனர்.
இந்த பஸ்கள் மேட்டுப்பாளையம் உட்பட சமவெளி பகுதிகளுக்கு செல்லும் போது பயணிகள் இட நெருக்கடியில் நின்று செல்ல சிரமப்படுகின்றனர். இந்த பஸ்களுக்கு மோட்டார் வாகன விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது. வட்டார போக்குவரத்து ஆணையம் தீர்வு காண நடவடிக்கை வேண்டும்,'' என்றார்.

