/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பில்லுார் அணை நிரம்ப வாய்ப்பு பவானி ஆற்றில் வெள்ள அபாயம்
/
பில்லுார் அணை நிரம்ப வாய்ப்பு பவானி ஆற்றில் வெள்ள அபாயம்
பில்லுார் அணை நிரம்ப வாய்ப்பு பவானி ஆற்றில் வெள்ள அபாயம்
பில்லுார் அணை நிரம்ப வாய்ப்பு பவானி ஆற்றில் வெள்ள அபாயம்
ADDED : மே 23, 2024 01:55 AM
மேட்டுப்பாளையம்: பில்லூர் அணை நிரம்ப வாய்ப்பு உள்ளதால், எந்த நேரத்திலும் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் ஆற்றின் கரையோரம் உள்ள பொது மக்கள், பாதுகாப்பாக இருக்கும்படி, நகராட்சி கமிஷனர் அறிவித்துள்ளார்.
பில்லூர் அணையின் நீர்மட்ட உயரம், 100 அடியாகும். அணையின் பாதுகாப்பு நலன் கருதி, 97 அடிக்கு நீர்மட்டம் உயரும்போது, அணை நிரம்பியதாக அறிவிப்பு வெளியிடப்படும். கடந்த மூன்று மாதங்களாக பில்லூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை ஏதும் பெய்யாததால், அணைக்கு நீர் வரத்து முற்றிலும் குறைந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் குறைந்ததால், அணையிலிருந்து பவானி ஆற்றில், கடந்த மூன்று மாதங்களாக தண்ணீர் திறந்து விடவில்லை.
தற்போது அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில், மழை பெய்து வருவதால், அணைக்கு நீர் வரத்து அதிகரித்து, நீர்மட்டம் கிடு கிடு என உயர்ந்து, 94.50 அடியை எட்டியுள்ளது. அணை நிரம்ப இன்னும் 3 அடி தண்ணீர் மட்டுமே உள்ளதால், எந்த நேரத்திலும் அணை நிரம்பி வழிய வாய்ப்புள்ளது.
இது குறித்து மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர் அமுதா விடுத்துள்ள அறிக்கையில்,'பில்லூர் அணையில் நீர்மட்டம் உயர்ந்ததால், பவானி ஆற்றில் வினாடிக்கு, 3,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் பில்லூர் அணை நீர் பிடிப்பு பகுதிகளில், மழை பெய்து வருவதால், அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.
அதனால் எந்த நேரத்திலும், அணை நிரம்பும் போது, பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் ஆற்றின் கரையோரம் உள்ள பொதுமக்கள், பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டும். இவ்வாறு கமிஷனர் அறிக்கையில் கூறியுள்ளார்.

