/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுாரில் பரவிய தீ; அணைத்த தீயணைப்பு வீரர்கள்
/
குன்னுாரில் பரவிய தீ; அணைத்த தீயணைப்பு வீரர்கள்
ADDED : செப் 17, 2024 10:02 PM

குன்னுார் : குன்னுாரில் உள்ள, தமிழ்நாடு அரசு ஓட்டலில், காய்ந்த செடிகளுக்கு வைத்த தீ சுற்றுப்புற பகுதிகளில் பரவியதை அடுத்து, தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரம் போராடி அணைத்தனர்.
குன்னுார்- -ஊட்டி சாலையில், தமிழ்நாடு ஓட்டல் உள்ளது. இங்கு பராமரிப்பு பணிகள் நடந்து வரும் நிலையில், முட்புதர்களுக்கு தீ வைக்கப்பட்டது. அந்த தீ அருகில் உள்ள செடி, கொடி மற்றும் சிறிய மரங்களின் மீது பரவியது.
தகவலின் பேரில், தீயணைப்பு துறை நிலைய அலுவலர் குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அரை ஏக்கர் பரப்பளவில் செடிகள், சிறிய மரங்கள் எரிந்து சேதமாகின.
வழக்கத்திற்கு மாறாக, குன்னுார் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்ததுடன் காற்றின் வேகமும் தீவிரமாக உள்ளதால், தீ எளிதில் பரவுகிறது.
தீயணைப்பு துறை அதிகாரிகள் கூறுகையில், 'இனி காட்டு தீ ஏற்படும் அபாயம் உள்ளதால், தோட்ட பராமரிப்பு பணியில் முட்புதர்களுக்கு தீ வைப்பதை தவிர்க்க வேண்டும்,' என்றனர்.

