ADDED : ஏப் 24, 2024 09:57 PM

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி, சமயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன் தினம் ஊருக்குள் பாகுபலி யானை உலா வந்தது.
மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தேக்கம்பட்டி, குரும்பனூர், ஓடந்துறை, பாலப்பட்டி, ஊமப்பாளையம், சமயபுரம், காந்தையூர், லிங்காபுரம், உழியூர், மொக்கை மேடு என பல்வேறு பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக பாகுபலி எனப்படும் ஒற்றை காட்டு யானையின் நடமாட்டம் உள்ளது.
அவ்வப்போது ஊருக்குள் வரும் பாகுபலி யானை, அதன் பின் சில மாதங்களுக்கு வனப்பகுதிக்குள்ளேயே இருந்து விடும்.
இந்த நிலையில், தற்போது பாகுபலி யானை மீண்டும் ஊருக்குள் உலா வர துவங்கியுள்ளது. நேற்று முன் தினம் காலை தேக்கம்பட்டி, சமயபுரம், சுக்குகாபி கடை உள்ளிட்ட பகுதிகளில் ஊருக்குள் வந்தது. சிறிது நேரம் சுற்றிய பின்னர் மக்களை தொந்தரவு செய்யாமல் மீண்டும் தேக்கம்பட்டி அருகே உள்ள வனப்பகுதிக்குள் சென்று விட்டது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'பாகுபலி யானை யாரையும் தொந்தரவு செய்வது இல்லை என்றாலும், பயமாக உள்ளது.
அடிக்கடி இதுபோல் ஊருக்குள் வருவதால் இருசக்கர வாகனங்களில் செல்வதற்கும் பயமாக உள்ளது, என்றனர். மேட்டுப்பாளையம் வனத்துறையினர் கூறுகையில், 'பாகுபலி யானையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
அதிகாலை நேரத்தில் ஊட்டி, கோத்தகிரி சாலையில் உலா வர வாய்ப்புள்ளது. இவ்வழியாக செல்வோர் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். மக்கள் யாரும் யானையை தொந்தரவு செய்யக்கூடாது. குறிப்பாக செல்பி எடுக்கக்கூடாது, என்றனர்.------------

