/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆதரவற்ற பெண்களுக்கான நலத்திட்ட கருத்தரங்கு
/
ஆதரவற்ற பெண்களுக்கான நலத்திட்ட கருத்தரங்கு
ADDED : நவ 08, 2024 07:22 AM
திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில், நாமக்கல் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கான நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
மாவட்ட சமூக நலஅலுவலர் காயத்ரி வரவேற்றார். நாமக்கல் கலெக்டர் உமா, ஆதரவற்ற பெண்களுக்கு தையல் இயந்திரம் உள்ளிட்ட பொருட்களை வழங்கி பேசியதாவது:விடியல் பயணம், மகளிர் உரிமைத்தொகை, காலை உணவு திட்டம், ஆடு, மாடுகள் வளர்க்க திட்டம், கோழிகள் வளர்க்க மானியத்துடன் கூடிய கடன், தேனீ வளர்ப்பு போன்ற பல்வேறு திட்டங்களுக்கு மானியத்துடன் கூடிய கடன் உதவிகளை அரசு வழங்கி வருகிறது. இவற்றையெல்லாம் பயன்படுத்தி, நீங்கள் வாழ்வில் மென்மேலும் வளர வேண்டும். பெண்கள் வளர்ந்து விட்டோம், ராக்கெட் விடுகிறோம், விமானம் ஓட்டுகிறோம், படித்து விட்டோம், பெண்கள் தொழில் செய்ய முன் வந்திருக்கிறோம் என பல்வேறு நிலைகளில் உயர்ந்திருந்த போதும், இளம் வயது பெண்கள் சமூகத்தில் பாலியல் கருவிகளாக பயன்படுத்தப்படும் நிலை நீடித்து வருகிறது. பெற்றோர்கள் நல்ல கருத்துக்களை எடுத்து கூறி, படிக்கும் வயதில் படிக்க வைக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.
சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் பிரபாகரன், மகளிர் திட்ட அலுவலர் செல்வராஜ், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஷீலா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ராஜேஷ்குமார், மாவட்ட திட்ட அலுவலர் சசிகலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

