/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
லாரி ஆபீஸ், பைனான்சில் புகுந்து மர்ம நபர் கைவரிசை
/
லாரி ஆபீஸ், பைனான்சில் புகுந்து மர்ம நபர் கைவரிசை
ADDED : மார் 12, 2024 04:02 AM
நாமக்கல்: நாமக்கல் வள்ளிபுரம், புறவழிச்சாலை அருகே, சன் ஆட்டோ டீசல் ஒர்க்ஸ் என்ற லாரி பழுது நீக்கும் பட்டறையும், அதற்கு அருகே, செல்வகணபதி லாரி புக்கிங் ஆபீஸ் மற்றும் செல்வ முருகன் பைனான்ஸ், டீ கடை, பழைய இரும்பு கடை உள்ளிட்ட கடைகள் செயல்படுகின்றன. நேற்று முன்தினம், விடுமுறை என்பதால் லாரி ஆபீஸ், நிதி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. நேற்று காலை, 9:00 மணிக்கு, லாரி ஆபீஸ் உரிமையாளர் அன்பழகன், 44, செல்வமுருகன் நிதிநிறுவன உரிமையாளர் வெங்கடேசன், 52, ஆகியோர் வழக்கம் போல் அலுவலகத்தை திறந்தனர்.
அப்போது, கடையில் இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு, அதிலிருந்து ரொக்க பணம் திருடப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து, 'சிசிடிவி' கேமராக்களை ஆய்வு செய்தபோது, நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:00 முதல், நேற்று அதிகாலை, 3:00 மணி வரை, தலையில் குல்லா அணிந்த மர்ம நபர் ஒருவர், அப்பகுதியில் இருந்த லாரி பட்டறை, பழைய இரும்பு கடை, லாரி ஆபீஸ், நிதி நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் இருந்த பீரோ, மேசைகளை உடைத்து, அதிலிருந்த ரொக்க பணம் மற்றும் மொபைல் போன்களை திருடி செல்வது தெரியவந்தது.
இந்த, 'சிசிடிவி' காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் லாரி அலுவலகத்தில், 30,000 ரூபாய், ஒரு மொபைல் போன், செல்வமுருகன் நிதிநிறுவனத்தில், 40,000 ரூபாய், மற்றொரு லாரி அலுவலகத்தில், 10,500 ரூபாய் என, மொத்தம், 80,0000 ரூபாயை மர்மநபர் திருடிச் சென்றுள்ளார். இதுகுறித்து, நல்லிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

