/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சுங்கச் சாவடிகளை மூடுவதாக தி.மு.க., இரட்டை வேடம்
/
சுங்கச் சாவடிகளை மூடுவதாக தி.மு.க., இரட்டை வேடம்
ADDED : ஏப் 04, 2024 04:38 AM
நாமக்கல்: ''சுங்கச் சாவடிகளை கொண்டு வந்த, தி.மு.க., தற்போது, மூடுவதாக இரட்டை வேடம் போடுகிறது,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., காட்டமாக பேசினார்.
நாமக்கல் லோக்சபா தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் தமிழ் மணியை ஆதரித்து, கட்சியின் பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பேசியதாவது:
நாமக்கல் மாவட்டம்,
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் இரும்புக் கோட்டை. நாமக்கல் லோக்சபா தொகுதியும் அப்படித்தான். பல தொழில்கள் நிறைந்த மாவட்டம்.
தற்போது, விடியா, தி.மு.க., அரசால், மத்திய அரசால் தொழில்கள் சரிவடைந்து, வேலையில்லா சூழ்நிலை இந்த மாவட்டத்தில் பார்க்கிறோம். இந்த மாவட்டத்தில், 20,000 லாரிகள் இயங்கி வருகின்றன. இந்த லாரி தொழிலில் மட்டும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். இந்த ஆட்சியில் மக்களுக்கு என்ன கிடைத்தது. தி.மு.க., தேர்தல் அறிக்கையில் பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். அதில், சுங்கச் சாவடிகளை மூடுவதாக தெரிவித்துள்ளனர். இந்த சுங்கச்சாவடிகளை கொண்டு வந்தது, மத்தியில், பா.ஜ., அரசு இருக்கும்போது, தி.மு.க.,வை சேர்ந்த டி.ஆர்.பாலு, தரைவழி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார்.
அப்போது தான், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சாலை அமைக்கப்பட்டு சுங்கச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டன. அதனால், லாரி உரிமையாளர், 8,000 முதல், 10,000 ரூபாய் வரை சுங்க கட்டணம் செலுத்துகின்றனர். தற்போது, தேர்தல் அறிக்கையில், 'சுங்கச் சாவடிகள் மூடப்படும்' என அறிவித்து இரட்டை வேடம் போடுகின்றனர்.
அதேபோல், 'நீட்' தேர்வு. 2010ல் மத்தியில், காங்., ஆட்சி. அப்போது இந்த மாவட்டத்தை சேர்ந்த காந்திச்செல்வன், மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சராக இருந்தார். 2010 டிச., 21ல், மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியா கெஜட்டில் நோட்டிபிகேசன் போட்டாங்க. அப்போது தான், 'நீட்' தேர்வு வந்தது. கொண்டு வந்ததும் அவர்கள், இன்றைக்கு ரத்து செய்ய வேண்டும் என்று மக்களை ஏமாற்றி நாடகம் நடிப்பதும், தி.மு.க., தான்.
எல்லா துறையிலும் ஊழல். ஊழல் இல்லாத துறையே கிடையாது. லஞ்சம் இல்லாத துறையே கிடையாது. இன்னும், 24 மாதம் தான் இருக்கிறது ஆட்சி மாற்றத்துக்கு. 24 மாதம் கழித்து, நீங்கள் எப்படி எங்கள் மீது பொய் வழக்கு போட்டீர்கள். ஆனால், நாங்கள் உங்கள் மீது பொய் வழக்கு போட மாட்டோம். உண்மையான வழக்கு போடுவோம்.
சத்துணவு ஊழியர், விவசாயிகள், மாற்றுத்திறனாளிகள், டாக்டர்கள், செவிலியர்கள் என எல்லாரும் போராட்டம் நடத்தும் சூழ்நிலையை, விடியா தி.மு.க., ஆட்சியில் பார்க்கிறோம். இதில் முதல்வர் ஸ்டாலின், நீங்கள் நலமா என கேட்கிறார். இவ்வளவு பிரச்னை இருக்கும்போது யார் நலமாக இருக்க முடியும். இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக இருக்க, அ.தி.மு.க., தான் காரணம்.
தற்போது நாங்கள் சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்கிறோம். ஒரு சாதனையையாவது நீங்கள் சொல்லி ஓட்டு கேளுங்கள் பார்க்கலாம். செய்தால் தான் சொல்ல முடியும். என்னை பற்றி திட்டுவார். அ.தி.மு.க., ஆட்சி இருண்ட ஆட்சி என்கிறார். எங்கள் ஆட்சி ஒளிமயமான ஆட்சி.
இவ்வாறு அவர் பேசினார்.
மாவட்ட செயலாளர் தங்கமணி, முன்னாள் அமைச்சர்கள் சரோஜா, விஜயபாஸ்கர், எம்.எல்.ஏ., சேகர், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பாஸ்கர், பொன் சரஸ்வதி, பொதுக்குழு உறுப்பினர் மயில் சுந்தரம் உள்பட பலர் பங்கேற்றனர்.

