/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வாக்குறுதியை நிறைவேற்றாத தி.மு.க.,வை கண்டித்து வரும் 2ல் பா.ஜ., ஆர்ப்பாட்டம்
/
வாக்குறுதியை நிறைவேற்றாத தி.மு.க.,வை கண்டித்து வரும் 2ல் பா.ஜ., ஆர்ப்பாட்டம்
வாக்குறுதியை நிறைவேற்றாத தி.மு.க.,வை கண்டித்து வரும் 2ல் பா.ஜ., ஆர்ப்பாட்டம்
வாக்குறுதியை நிறைவேற்றாத தி.மு.க.,வை கண்டித்து வரும் 2ல் பா.ஜ., ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 26, 2024 02:19 PM
ப.வேலுார்: ''வாக்குறுதியை நிறைவேற்றாத, தி.மு.க., அரசை கண்டித்து, வரும், 2ல் ப.வேலுாரில், பா.ஜ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது,'' என, மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் கூறினார்.
மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடி, 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் பேசி வருகிறார். நேற்று, பிரதமர் ஆற்றிய உரையை, நாமக்கல் மாவட்டம், ப.வேலுார், குப்பிச்சிபாளையம் பகுதியில், பா.ஜ., மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கேட்டறிந்தனர்.
தொடர்ந்து, ராமலிங்கம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நம் நாட்டில் சாமானிய மக்களாக இருந்து, பல்வேறு சேவைகளை செய்து முன்னேறியவர்களை, 'மனதின் குரல்' நிகழ்ச்சி மூலம், பிரதமர் மோடி அடையாளம் காட்டி வருகிறார். அதன்படி, ஆடு வளர்ப்பு, மொழித்துறையில் சேவை செய்பவர்கள், இளம் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டிய அவசியம் உள்ளிட்டவை குறித்து பேசினார். இது அனைவரையும் உத்வேகம் அடைய செய்துள்ளது.
காவிரி- திருமணி முத்தாறு இணைப்பு திட்டத்தை தேர்தல் அறிக்கையில் அறிவித்து இதுவரை நிறைவேற்றாததால், காவிரி ஆற்றுடன் திருமணிமுத்தாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றக்கோரி வரும், 2ல்- ப.-வேலுாரில், பா.ஜ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
கோதாவரி - காவிரி நதிகளை இணைப்பதற்கு மத்திய அரசு முயற்சி எடுத்த நிலையில், மாநில அரசு இதுவரை ஒத்துழைப்பு அளிக்கவில்லை. கூட்டணி குறித்து பா.ஜ., தலைமை தான் முடிவெடுக்கும். எங்களை பொறுத்தவரை தமிழகத்தில் உள்ள அனைத்து லோக்சபா தொகுதிகளிலும், தாமரை சின்னத்தில் போட்டியிடுவோம். பிரதமர் முதல் கட்சி நிர்வாகிகள் வரை அனைவரும் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜ., நாமக்கல் மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார், மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் காந்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

