/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சொந்த தொகுதியில் தேர்தல் பணி வழங்க கோரிக்கை
/
சொந்த தொகுதியில் தேர்தல் பணி வழங்க கோரிக்கை
ADDED : ஏப் 11, 2024 11:22 AM
நாமக்கல்: 'ஆசிரியர்கள், அரசு பணியாளர்களுக்கு அவர்களது சொந்த தொகுதியிலேயே தேர்தல் பணியில் ஈடுபட ஆணை வழங்க வேண்டும்' என, நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதாசாகுவுக்கு, நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் ராமு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் முதல் கட்டமாக, ஏப்., 19 லோக்சபா தேர்தல் நடக்கிறது. அதையொட்டி, தமிழகம் முழுதும் தேர்தல் பணியில் ஈடுபடக்கூடிய அரசு பணியாளர்கள், ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி நடந்தது.
இந்நிலையில், நாமக்கல், ராசிபுரம், ப.வேலுார், திருச்செங்கோடு, சேந்தமங்கலம், குமாரபாளையம் ஆகிய, ஆறு சட்டசபை தொகுதியில் உள்ள பெண் ஆசிரியர்களை அதே தொகுதியில் தேர்தல் பணியில் நியமிக்க வேண்டும்.
ஓட்டுச்சாவடி தேர்தல் பணியாளர்கள் நியமனத்தில் சில குழுக்களில் முழுமையாக பெண் பணியாளர்கள் இருக்கின்றனர். எனவே, ஒரு ஓட்டுச்சாவடியில் முழுதும் பெண் பணியாளர்கள் கொண்ட குழு இல்லாமல் அதில் ஒரு ஆண் பணியாளரும் அவசியமாக இடம்பெற வேண்டும். இதுபோன்று ஓட்டுச்சாவடி பணியாளர்கள் குழுவை உருவாக்க வேண்டும்.
கடந்த வாரம், நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் சட்டசபை தொகுதியை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் ஜெயபாலன், சேந்தமங்கலம் சட்டசபை தொகுதியில் தேர்தல் பயிற்சியை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பி சென்றுகொண்டிருந்த போது, சாலை விபத்தில் மரணமடைந்தார்.எனவே, ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள ஆண், பெண் அரசு பணியாளர்களை அந்தந்த தொகுதியிலேயே தேர்தல் பயிற்சியில், பணியில் ஈடுபடுத்த தேர்தல் ஆணையம் உரிய செயல்முறைகளை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

