/
உள்ளூர் செய்திகள்
/
நாகப்பட்டினம்
/
ஆமையை மிஞ்சும் வேகத்தில் நான்கு வழிச்சாலை பணி சீர்காழி - நாகை 3ம் கட்ட பணிகள் வேகம் எடுக்குமா?
/
ஆமையை மிஞ்சும் வேகத்தில் நான்கு வழிச்சாலை பணி சீர்காழி - நாகை 3ம் கட்ட பணிகள் வேகம் எடுக்குமா?
ஆமையை மிஞ்சும் வேகத்தில் நான்கு வழிச்சாலை பணி சீர்காழி - நாகை 3ம் கட்ட பணிகள் வேகம் எடுக்குமா?
ஆமையை மிஞ்சும் வேகத்தில் நான்கு வழிச்சாலை பணி சீர்காழி - நாகை 3ம் கட்ட பணிகள் வேகம் எடுக்குமா?
ADDED : ஆக 23, 2025 11:37 PM

நாகப்பட்டினம்:நாகை - விழுப்புரம் நான்கு வழிச்சாலையில், மூன்றாம் கட்ட பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. மழைக்காலம் துவங்குவதற்கு முன் பணிகளை முடிப்பதற்கு நகாய் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாகை-விழுப்புரம் இடையே 179.5 கி.மீ., துாரத்துக்கு ரூ.6,431 கோடியில் நான்கு வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் துவங்கியது. இதில், விழுப்புரத்தில் இருந்து சீர்காழி அடுத்த சட்டநாதபுரம் வரை, 128.8 கி.மீ., துாரத்துக்கு இரண்டு கட்ட பணிகள் நிறைவடைந்து, மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டுள்ளது.
சட்டநாதபுரத்தில் இருந்து, நாகை புத்துார் வரையிலான 56 கி.மீ., துார பணிகள் நடந்து வருகிறது. இதில், 2 ரயில்வே மேம்பாலங்கள் உட்பட 24 மேம்பாலங்கள், 27 சிறிய பாலங்கள் அமைக்கும் பணிகள் நடக்கிறது. 'வெல்ஸ்பன்' என்ற கட்டுமான நிறுவனம் பணிகளை மேற்கொண்டுள்ளது.
50 சதவீத பணிகளே நிறைவு கடந்த 2022ம் ஆண்டு முடிவடைய வேண்டிய பணிகள் ஜவ்வாக இழுத்துக் கொண்டே செல்கிறது. ஆங்காங்கே இடைவெளி விட்டு சாலைகள் அமைக்கப்பட்டு வரும் நிலையில், மேம்பால பணிகள் 50 சதவீதம் மட்டுமே நடந்துள்ளது. வடகிழக்கு பருவமழை விரைவில் துவங்க உள்ள நிலையில், பணிகள் மந்தமாக நடப்பது வாகன ஓட்டுகள் மற்றும் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பணியின் தாமதம் குறித்து கேட்டபோது, 'சாலை பணிகளுக்கு தேவையான மண் கிடைப்பதில் சிரமம் உள்ளது. தொடர்ச்சியாக மண் கிடைப்பதில்லை. நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மண் எடுப்பதற்கு அரசு அனுமதி அளித்தபோதும், கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எனவே, நெய்வேலியில் இருந்து மண் கொண்டு வரப்படுவதால் கால தாமதம் ஏற்படுகிறது.
மண் தட்டுப்பாட்டால் பாதிப்பு கடலோரப் பகுதி என்பதால் அடிக்கடி மழை பொழிவு காரணமாக பணிகள் தடைபடுகிறது. தடங்கலின்றி மண் கிடைத்தால் பணிகள் விரைந்து முடிக்கப்படும். எனவே மண் தடையின்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பணியில் ஈடுபட்டுள்ள நிறுவன அலுவலர்கள் தெரிவித்தனர்.
தேசிய நெடுஞ்சாலை பொறியாளர்கள் கூறுகையில், 'வரும் 2026 ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு சாலை முழுமையாக பயன்பாட்டிற்கு வரும்' என்கின்றனர்.
அக்டோபரில் வடகிழக்கு பருவமழை துவங்கி விடும் நிலையில், அதற்கு முன்னதாகவே வங்கக்கடலில் பருவநிலை மாற்றம் காரணமாக மழை பெய்ய துவங்கும். அப்போது புதிய சாலை பணிக்காக குவியல், குவியலாக கொட்டப்பட்டுள்ள மண்மேடுகளும் கரைந்தால், விபத்துக்கள் தவிர்க்க முடியாதாகி விடும்.
எனவே, பருவ மழை துவங்கும் முன், பணிகளை விரைந்து முடிப்பதற்கு நகாய் அதிகாரிகள் நடவடிக்கையில் இறங்க வேண்டும். மேலும், மூன்றாம்கட்ட பணிகள் முடிந்தால் தான், நாகை - விழுப்புரம் நான்கு வழிச்சாலை முழுமை பெற்று முழுவீச்சில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.