/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பக்கவாதம் வந்த 24 மணி நேரத்திற்குள்... இனி 'பக்காவான' சிகிச்சை: அரசு மருத்துவமனையில் வந்தாச்சு கருவி
/
பக்கவாதம் வந்த 24 மணி நேரத்திற்குள்... இனி 'பக்காவான' சிகிச்சை: அரசு மருத்துவமனையில் வந்தாச்சு கருவி
பக்கவாதம் வந்த 24 மணி நேரத்திற்குள்... இனி 'பக்காவான' சிகிச்சை: அரசு மருத்துவமனையில் வந்தாச்சு கருவி
பக்கவாதம் வந்த 24 மணி நேரத்திற்குள்... இனி 'பக்காவான' சிகிச்சை: அரசு மருத்துவமனையில் வந்தாச்சு கருவி
ADDED : நவ 07, 2025 04:18 AM

மதுரை: மதுரை அரசு மருத்துவமனை மூளை நரம்பியல் துறையில் ரூ.18 கோடியில் அமைக்கப்பட்டுள்ள 'நியூரோ கேத்லேப்' கருவி மூலம், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் பாதிப்பை சரிசெய்ய முடியும்.
மூளை நரம்பியல் துறை சார்பில் மருத்துவமனையில் ஜெய்க்கா கட்டடத்தின் 6வது மாடியில் உள்ள அதிநவீன அறுவை சிகிச்சை (ஹைபிரிட்) அரங்கில் 'நியூரோ கேத்லேப்' அமைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் ரூ.18கோடியில் இக்கருவி வாங்கப்பட்டது. ரத்தக்குழாயின் வழியே சிறிய குழாயை (கதீட்டர்) செலுத்தி எந்த இடத்தில் அடைப்பு உள்ளதோ அந்த இடத்தில் செலுத்தி அடைப்பை நீக்குவதே இதன் வேலை. அதற்கென சிறப்பு பயிற்சி பெற்ற டாக்டர்கள் தேவை. தற்போது டாக்டர்கள் இருவார பயிற்சியாக சென்னை கலைஞர் நுாற்றாண்டு மருத்துவமனையில் பயிற்சி பெற சென்றுள்ளனர் என்கிறார் துறைத்தலைவர் டாக்டர் முருகன்.
அவர் கூறியதாவது: புறநோயாளிகள் பிரிவில் தினமும் 70 புதிய நோயாளிகள் உட்பட தொடர் சிகிச்சைக்காக 500 பேர் வருகின்றனர். அதில் 15 முதல் 20 நோயாளிகள் பக்கவாதம் வந்தபின்பே சிகிச்சைக்கு வருகின்றனர். ஆண்டுக்கு 80 நோயாளிகள் வீதம் ஏழாண்டுகளாக, 'த்ராம்போலைசிஸ்' சிகிச்சை அளிக்கிறோம். இம்முறையில், பக்கவாதம் வந்த நான்கு மணி நேரத்திற்குள் சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்டால் 'அல்டிபிளேஸ்' எனும் மருந்தை செலுத்தி மூளை தமனியில் உள்ள அடைப்பை கரைத்துவிடலாம். அதற்கு மேல் தாமதம் எனில் பக்கவாதத்தால் ஏற்படும் பாதிப்பும் அதிகமாகும். அதுபோன்ற சமயங்களில் 'நியூரோ கேத்லேப்' கருவி மூலம் பாதிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் பாதிப்பை சரிசெய்யலாம். இதிலுள்ள டிஜிட்டல் சப்ட்ராக் ஷன் ஆஞ்சியோகிராபி (டி.எஸ்.ஏ.,) மூலம் எந்த ரத்தக்குழாயில் அடைப்பு வந்துள்ளது என்பதை கண்டறியலாம். அதன்பிறகு 'மெக்கானிக்கல் த்ராம்பெக்டமி' மூலம் 24 மணி நேரத்திற்குள் மூளையில் தற்காலிக 'ஸ்டென்ட்' பொருத்தி அடைப்பை சரிசெய்யலாம். மேலும் ரத்தக்குழாய் விரிவடைந்திருந்தால் (அனுரிஸம்) 'கிளிப்பிங், காயிலிங்' முறையில் சரிசெய்யலாம். இந்த கருவியால் பக்கவாத பாதிப்புக்குள்ளானவர்கள் சேதாரமின்றி சிகிச்சை பெற முடியும். பயிற்சி பெற்ற டாக்டர்கள் மூலம் ஒருநாளைக்கு 2 பேருக்கு சிகிச்சை அளிக்க முடியும். முதல்வரின் இலவச காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறலாம் என்றார்.

