/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
டி.என்.பி.எஸ்.சி., மூலம் கால்நடைத்துறை ஆய்வாளர் பணியிடம்; அந்தரத்தில் தொங்கும் உதவி மருத்துவர்களின் கதியென்ன
/
டி.என்.பி.எஸ்.சி., மூலம் கால்நடைத்துறை ஆய்வாளர் பணியிடம்; அந்தரத்தில் தொங்கும் உதவி மருத்துவர்களின் கதியென்ன
டி.என்.பி.எஸ்.சி., மூலம் கால்நடைத்துறை ஆய்வாளர் பணியிடம்; அந்தரத்தில் தொங்கும் உதவி மருத்துவர்களின் கதியென்ன
டி.என்.பி.எஸ்.சி., மூலம் கால்நடைத்துறை ஆய்வாளர் பணியிடம்; அந்தரத்தில் தொங்கும் உதவி மருத்துவர்களின் கதியென்ன
ADDED : ஆக 24, 2025 09:47 PM
மதுரை : தமிழக கால்நடைத் துறையில் ஆய்வாளர் நிலை 2 பணிக்கு நேரடி நியமன முறை ரத்து செய்யப்பட்டு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) மூலம் நியமனம் செய்ய அறிவிப்பு கெஜட்டில் வெளியிடப்பட்டுள்ளது. எவ்வித அறிவிப்பும் இன்றி பணியிழந்த கால்நடை உதவி மருத்துவர்கள் 240 பேர் முதல்வர் நடவடிக்கையை எதிர்நோக்கி இருக்கின்றனர்.
கால்நடைத் துறையில் ஆய்வாளர் நிலை 2 பணியாளர்கள், கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் உதவி செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள், முந்தைய காலங்களில் பிளஸ் 2 முடித்தபின், நேரடியாக துறைக்கு விண்ணப்பித்து, முக்கிய பிரமுகர்களின் பரிந்துரையில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களை பணியில் சேர்த்து, 10 மாதங்கள் பயிற்சி அளித்து, நிரந்தர பணியாளர்களைப் போல ரெகுலர் சம்பளமும் வழங்குகின்றனர்.
இதுதொடர்பாக சிலர், பட்டம் முடித்தவர்கள் பலர் இருப்பதால், டி.என்.பி.எஸ்.சி., மூலம் தேர்வு செய்ய வேண்டும் என வழக்கு போட்டுள்ளனர். விழித்துக் கொண்ட அரசு, இப்பதவிக்கான நியமனம் டி.என்.பி.எஸ்.சி., மூலம் நடைபெறும் என உத்தரவிட்டு, அறிவிப்பை கெஜட்டில் வெளியிட்டுள்ளது. ஜூலை 1 க்குள் 32 வயதுள்ள, பட்டப்படிப்பு (உயிரியல், தாவரவியல், விலங்கியல் படித்தவர்கள்) முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
கால்நடைத் துறையில் உதவி மருத்துவர் பணியிடங்களில் 13 ஆண்டுகளுக்கு முன் பணியில் சேர்ந்தவர்கள் தற்போது வேலையின்றி வெளியேற்றப்பட்டுள்ளனர். இவர்கள் ஆடு, மாடு, கோழி வழங்கும் திட்டத்தில் 10ஏ (1) ன் கீழ் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தற்காலிக பணியில் சேர்ந்தவர்கள். 13 ஆண்டுகளாக பணியில் இருந்த இவர்களின் இடத்தில் கால்நடை உதவி மருத்துவர்களை அரசு நியமனம் செய்தும், இடமாறுதல் செய்தும் உத்தரவிட்டுள்ளது.
இந்தப் பணியாளர்களின் நிலைஎன்ன, இடமாறுதலா, பணி நீக்கமா என்று எதுவும் சொல்லாமல் அவர்களை 'அந்தரத்தில் தொங்க'விட்டுள்ளது அரசு. இதனால் 243 கால்நடை உதவி மருத்துவர்கள் பல மாதங்களாக பணியில் இல்லாமல் வீட்டில் உள்ளனர்.
அவர்கள் கூறுகையில், ''13 ஆண்டுகள் நம்பிக்கையுடன் பணியாற்றியும் எங்கள் பணியிடத்தில் புதிய நியமனம் செய்துள்ளனர். நாங்கள் பணி நீக்கமா, பணி தொடர வேண்டுமா என எதுவும் சொல்லாமல் கைவிட்டுள்ளனர். அனைவரும் 50 வயதை நெருங்கியவர்கள். வாழ்வாதாரமின்றி தத்தளிக்கிறோம்.
இத்துறையில் கால்நடை கிளை நிலையத்தை தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருந்தகமாக மாற்றி, பாதிக்கப்பட்ட உதவி மருத்துவர்களுக்கு மீண்டும் பணி வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.