/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பத்தாவது வார்டில் பாதாள சாக்கடையால் பிரச்னை
/
பத்தாவது வார்டில் பாதாள சாக்கடையால் பிரச்னை
ADDED : டிச 18, 2024 06:38 AM

மதுரை : மதுரை மூன்றுமாவடி, கற்பக நகர் பகுதிகளில் தரமற்ற ரோடுகளாலும், பாதாளச் சாக்கடை பிரச்னையாலும் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
மதுரை மாநகராட்சி 10வது வார்டில் மூன்றுமாவடி, கற்பகம் நகர், சர்வேயர் காலனி, சூர்யா நகரின் ஒருபகுதி, கணபதி நகர், கடச்சனேந்தல் பகுதிகள் உள்ளன. இங்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. கற்பகம் நகர் பகுதியில் சமீபத்தில் அமைத்த தார் ரோடுகள் தரமில்லாததால் கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளன.
டூவீலரில் செல்வோர் கீழே விழுந்து காயமடையும் நிலையுள்ளது. பாதாள சாக்கடையில் அடிக்கடி அடைப்பு ஏற்படுவதால் ரோட்டில் கழிவுநீர் செல்கிறது. கொசு உற்பத்தி பெருகி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
தரமற்ற ரோடுகள்
ராமகிருஷ்ணன், கற்பகநகர்: சமீபத்தில் அமைத்த ரோடுகளை கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளுக்காக தோண்டினர். பணிகள் முடிந்தபின் குழிகளை சரிவர மூடாததால் பள்ளம் மேடாக உள்ளது. மழைக்காலங்களில் அதில் மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலையுள்ளது. கற்பகம் நகர் பகுதியில் ஆங்காங்கே குப்பை குவிந்துள்ளன. அவற்றை தினமும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாகனங்கள் ஆக்கிரமிப்பு
ஜெயபிரகாஷ், கற்பகநகர்: கற்பகம் நகர் 10வது தெரு 3வது குறுக்குத் தெருவில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை மதுரை மண்டல கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளது. ரேஷன் பொருள் கடத்தலில் பிடிபட்ட வாகனங்களை தெருக்களில் ஆக்கிரமித்து நிறுத்தியுள்ளனர். பல நாட்களாக கேட்பாரற்று கிடக்கும் இந்த வாகனங்களில் அமர்ந்து கஞ்சா விற்பனை உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. மாநகராட்சிக்கு 6 சதவீத வரி செலுத்தியும் அடிப்படை வசதியின்றி தவிக்கிறோம்
திட்டங்களுக்கு நிதி வேண்டும்
கவுன்சிலர் முத்துக்குமாரி (சுயேட்சை): இப்பகுதியில் 120 அடி ரோடு முதல் கற்பகம் நகர் வரை ரூ. 66 லட்சம் மதிப்பில் பாதாள சாக்கடை பைப்லைன் அமைக்கப்பட்டுள்ளது. கணபதி நகர், சண்முகா நகர் பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகளுக்கான திட்டம் உள்ளது. அதன் விவரங்களை அரசுக்கு அனுப்பியுள்ளோம். கொடிக்குளம் பகுதியில் ரூ. ஒரு கோடி செலவில் ரோடுகள் அமைக்கப்பட்டுள்ளன.
கூட்டுக்குடிநீர் பணிகளுக்காக 12 தெருக்களில் ரோடுகள் தோண்டப்பட்டன. அவை விரைவில் சரி செய்யப்படும். தினமும் இருமுறை துப்புரவு பணியாளர்கள் குப்பை அள்ளுகின்றனர்.
வார்டின் பல பகுதிகளில் புதிதாக ரோடுகள் அமைக்க ரூ.10 கோடி நிதி தேவைப்படுகிறது. 240 தெருவிளக்குகள் சீரமைக்கப்பட்டுள்ளன. கூடுதலாக 70 தெருவிளக்குகள் அமைக்க வேண்டியுள்ளது. பள்ளி மாணவியருக்காக மூன்றுமாவடியில் பஸ் ஸ்டாப் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.

