/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நடிகர் விஜய் வருகை உதயநிதிக்கு தான் சவால்
/
நடிகர் விஜய் வருகை உதயநிதிக்கு தான் சவால்
ADDED : அக் 28, 2024 06:39 AM

மதுரை: தமிழக அரசியலில் நடிகர் விஜய் வருகை தி.மு.க.,வுக்கு பலத்த அதிர்வை ஏற்படுத்தும். முதல்வர் கனவில் உள்ள உதயநிதிக்கு பெரும் சவாலாக அமையும் என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் தெரிவித்தார்.
மதுரையில் நமது நிருபரிடம் அவர் கூறியதாவது:
ஜனநாயக நாட்டில் யாரும் அரசியல் கட்சி துவக்கலாம். மாநாடு நடத்தலாம். அந்த வகையில் நடிகர் விஜய் த.வெ.கழகம் துவங்கி, மாநாட்டில் தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலில் விஜய் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார்.
குறிப்பாக அவரது வருகை தி.மு.க.,வுக்கு பெரும் அதிர்வை ஏற்படுத்தும். பா.ஜ.,வுக்கு பின்னடைவு ஏற்படும். சீமான் கட்சி ஓட்டுகள் சிதறும். தற்போதே தி.மு.க., கூட்டணியில் உள்ள பல கட்சிகள் விஜய் கட்சிக்கு தாவ தயாராக உள்ளன. அக்கட்சிகளை முதல்வர் ஸ்டாலின் தடுத்து நிறுத்தி பேச்சு வார்த்தை நடத்துகிறார்.
நடிகர் விஜயால் அ.தி.மு.க.,வுக்கு பாதிப்பு இல்லை. அவருடன் அ.தி.மு.க., கூட்டணி அமையுமா என்பது குறித்து இப்போது தெரிவிக்க முடியாது. தற்போதைய நிலையில் ஒரு குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தை வளர வளரத்தான் அதன் குணநலன்கள் தெரியும். அதுபோலத்தான் விஜய் தனது கொள்கைக்காக எந்த அளவில் போராட்டங்களை நடத்துகிறார் என்பதை பொறுத்தே முடிவு எடுக்கப்படும். அதுவரை அவரை யாரும் விமர்சிக்க வேண்டாம் என அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி நிர்வாகிகளுக்கு அன்பு கட்டளையிட்டுள்ளார்.
மதுரையில் பல ஆண்டுகளுக்கு பின் பெய்த அதிக மழையால் ரோடுகள் பல இடங்களில் சேதமடைந்துள்ளன.
மழைநீர் செல்லும் கால்வாய்களை முறையாக துார்வாராததால் தான் செல்லுார், பந்தல்குடி, முல்லைநகர், ஆத்திகுளம் ஆகிய பகுதிகளில் மக்கள் வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ளனர். மதுரை மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
மதுரையில் ஏற்பட்ட வெள்ளத்தில் தி.மு.க., கரைந்து விட்டது. அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோர் மீண்டும் இணைய வாய்ப்பில்லை என பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். 2026ல் தி.மு.க., வெற்றி பெறும் என்ற ஸ்டாலின் கனவு பலிக்காது. பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., கூட்டணியே வெற்றி பெறுவது உறுதி. இவ்வாறு கூறினார்.

