/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தமிழ் உள்ளவரை அகத்தியர் புகழ் இருக்கும் சுதா சேஷய்யன் பேச்சு
/
தமிழ் உள்ளவரை அகத்தியர் புகழ் இருக்கும் சுதா சேஷய்யன் பேச்சு
தமிழ் உள்ளவரை அகத்தியர் புகழ் இருக்கும் சுதா சேஷய்யன் பேச்சு
தமிழ் உள்ளவரை அகத்தியர் புகழ் இருக்கும் சுதா சேஷய்யன் பேச்சு
ADDED : பிப் 20, 2025 05:42 AM

மதுரை,: 'தமிழ் மொழி உள்ளவரை அகத்தியரின் புகழ் நிலைத்திருக்கும்' என மதுரையில் நடந்த அகத்திய முனிவர் குறித்த கருத்தரங்கில் சென்னை செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன துணைத் தலைவர் சுதா சேஷய்யன் பேசினார்.
மதுரை தியாகராஜர் கல்லுாரியில் தமிழ்த்துறை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில் 'அகத்தியர் - மரபும் தொடர்ச்சியும்' கருத்தரங்கம் நடந்தது. நிறைவு விழாவில் செயலாளர் ஹரி தியாகராஜன் தலைமை வகித்தார். வினாடி வினா, கட்டுரைப் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு சுதா சேஷய்யன் பரிசு வழங்கினார்.
அவர் பேசியதாவது: அகத்திய முனி, நாட்டின் பல்வேறு பகுதிகளை பண்பாட்டு ரீதியாக இணைத்தவர். அதனாலேயே தற்போது நடக்கும் காசித் தமிழ்ச் சங்கமம் அகத்தியரின் பங்களிப்பிற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அனைத்து மொழி இலக்கியங்களில் அவரைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. நாட்டினர் அனைவரும் அவரை சொந்தம் கொண்டாடுகின்றனர். இலக்கியம், இலக்கணம், சித்த மருத்துவம், அறிவியல், விண்வெளி என பல துறைகளில் பங்காற்றியுள்ளார்.
தமிழ் மொழி இருக்கும் வரை அவரது புகழ் இருக்கும். அகத்தியர் சித்த மருத்துவத்தின் தந்தை. காயத்தழும்புகளை தவிர்க்க அத்திமரப் பட்டைச் சாற்றை பரிந்துரைத்தார். அவரது மருத்துவ குறிப்புகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. அவர் பிறந்த மார்கழி மாத ஆயில்ய நட்சத்திர தினத்தை தேசிய சித்த மருத்துவ தினமாக கொண்டாடப்படுகிறது என்றார்.
பேராசிரியர் கற்பகம் நன்றி கூறினார். முதல்வர் பாண்டியராஜா, முன்னாள் முதல்வர் அருணகிரி, எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

