ADDED : ஆக 14, 2025 08:58 PM

மதுரை:மதுரை மாநகராட்சி வரி முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த், மருத்துவமனையில் இருந்து 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டு, நேற்று மாலை மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.
மதுரை மாநகராட்சியில் நடந்த பல கோடி வரி முறைகேடு புகார் தொடர் பாக, 16 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 17வது நபராக தி.மு.க., மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்தை சென்னையில் ஆக., 12ல் மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
பொன்வசந்த்திற்கு இதய துடிப்பில் மாறுதல் ஏற்பட்டதால் ஆக., 13ல் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் மாலை மருத்துவமனைக்கு மதுரை மாவட்ட முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் ஆனந்த் நேரில் சென்று ஆக., 26 வரை 'ரிமாண்ட்' செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், பொன்வசந்த் உடல்நிலை சீரானதை தொடர்ந்து, நேற்று மாலை, 3:20 மணிக்கு 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டு, மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.