/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரோட்டில் குப்பை வீசுவதை தவிர்த்தால் மதுரை மாநகராட்சி துாய்மை பெறும் கமிஷனர் சித்ரா அட்வைஸ்
/
ரோட்டில் குப்பை வீசுவதை தவிர்த்தால் மதுரை மாநகராட்சி துாய்மை பெறும் கமிஷனர் சித்ரா அட்வைஸ்
ரோட்டில் குப்பை வீசுவதை தவிர்த்தால் மதுரை மாநகராட்சி துாய்மை பெறும் கமிஷனர் சித்ரா அட்வைஸ்
ரோட்டில் குப்பை வீசுவதை தவிர்த்தால் மதுரை மாநகராட்சி துாய்மை பெறும் கமிஷனர் சித்ரா அட்வைஸ்
ADDED : டிச 21, 2025 05:07 AM

மதுரை: ''ரோட்டில் குப்பை வீசுவதை தவிர்த்தால் மாநகராட்சி துாய்மை பெறும்'' என மதுரை உணவு வர்த்தக மையத்தில் நடந்த 'மதுரை வளர்கிறது' எனும் கருத்தரங்கில் மாநகராட்சி கமிஷனர் சித்ரா பேசினார்.
இக்கருத்தரங்கிற்கு அக்ரி, அனைத்து தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ரத்தினவேலு தலைமை வகித்தார்.
'ஒளிரும் மதுரை' அறக்கட்டளையை கமிஷனர் சித்ரா தொடங்கி வைத்து பேசியதாவது: மதுரையை குப்பை மாநகராட்சி என்கின்றனர். அதிகம்குப்பை சேரும் இடங்களில் துாய்மைப் பணியாளர்கள் சிறப்பாக பணியாற்றுகின்றனர். வீடுகளில் குப்பை வாங்கப்பட்டாலும் பொறுமையின்மையால் மக்கள் ரோட்டில் வீசிச் செல்கின்றனர். அது எப்போது தவிர்க்கப்படுகிறதோ அப்போது மாநகராட்சி துாய்மைபெறும்.
மாற்றம் நமக்குள் இருந்து வர வேண்டும். கமிஷனர் எப்படி பணியாற்ற வேண்டும் எனக்கூற ஆயிரம் பேர் உள்ளனர். கமிஷனராக பணியாற்ற முடியுமா என்றால் அவர்களில் பாதிபேர் திணறுவர்.
பள்ளி, கல்லுாரி, மருத்துவமனை பகுதிகளில் உள்ள தெருநாய்களை காப்பகத்தில் சேர்க்கவே உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. பல இடங்களில் நாய்கள் காவல் காக்கின்றன.ஒரு தெருவில் வசிப்பவர்களை தவிர மற்றவர்களை கண்டால் அத்தெருநாய்கள் குரைக்கும். அவற்றுக்கு அப்பகுதியினரே கருத்தடை செய்து, உணவு வழங்கி வளர்க்கின்றனர். அவற்றை பிடிக்க முயன்றால் சண்டைக்கு வருகின்றனர்.
இதுகுறித்து தெரியாதவர்கள் நாய்கள் குரைப்பதால் துாக்கம் கெடுவதாக புகார் அளிக்கின்றனர். இவ்வுலகில் மனிதர்கள் மட்டும் வாழ வேண்டும் என சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை. எனினும் மனித உயிர்களும் முக்கியம்.தெருநாய் விஷயத்தில் சமூக ஆர்வலர்கள், குடியிருப்பு நிர்வாகிகள் முன்வந்தால் கட்டுப்படுத்த முடியும். மக்களின் ஒத்துழைப்பு இன்றி எதுவும் சாத்தியம் இல்லை.
இவ்வாறு பேசினார்.
வெள்ளக்கல் போன்று கூடுதலாக 4 குப்பை மறுசுழற்சி மையம் அமைக்க வேண்டும். தென்மாவட்ட மக்கள் ஏர்போர்ட் வந்து செல்ல வசதியாக கப்பலுாரில் இருந்து அம்பேத்கர் சிலை வரை விமான நிலையம் மேற்கு பகுதியை ஒட்டி செல்லும் ரோட்டை விரிவுபடுத்த வேண்டும். துவரிமான் - பரவையை இணைக்கும் பாலப்பணியை முழுமையாக முடிக்க வேண்டும்என சங்கம் சார்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
துாய்மைப்பணியாளர்களுக்கு உடை, காலனி, கையுறை அடங்கிய 'கிட் பேக்' வழங்கப்பட்டன. மாநில நெடுஞ்சாலைத் துறை மதுரைக் கோட்ட பொறியாளர் மோகன காந்தி, யூ எக்ஸ்போர்ட் தலைவர் திருப்பதிராஜன், மாமதுரையர் அமைப்பு தலைவர் திருமுருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

