/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை உதவி ஜெயிலர் 'போக்சோ'வில் கைது
/
மதுரை உதவி ஜெயிலர் 'போக்சோ'வில் கைது
ADDED : டிச 23, 2024 12:13 AM

மதுரை : மதுரை ஆத்திக்குளம் அஞ்சல் நகரை சேர்ந்தவர் பாலகுருசாமி, 51. மத்திய சிறையில் உதவி ஜெயிலராக இருந்தார். இவர், மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்த, முன்னாள் கைதி நடத்தும் இரவு நேர டிபன் கடைக்கு சென்றபோது, அந்தக் கைதியின் மூன்றாவது மகளான, 23 வயது பெண்ணிடம் தொடர்பில் இருக்க முயற்சித்தார்; அந்தப் பெண் மறுத்துவிட்டார்.
அதேநேரம் அப்பெண் எஸ்.ஐ., பணிக்கு முயற்சி செய்வதாக அறிந்த பாலகுருசாமி, அவரது அலைபேசி எண்ணில் தேர்வுக்கான தகவல்களை அனுப்பி, அதை அவரிடம் அலைபேசியில் காட்டுவது போல தொட முயற்சித்தார்.
'நீ என்னிடம் அனுசரித்து போனால் உன்னை அதிகாரி ஆக்குவேன்' எனக் கூறி தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பாலகுருசாமியின் அலைபேசி எண்ணை அந்த பெண், 'பிளாக்' செய்துவிட்டார். ஆனால் அப்பெண்ணின் அக்காவின் 14 வயது மகளிடம் அலைபேசி எண்ணை கொடுத்து தன்னிடம் அச்சிறுமியின் சித்தியை பேசும்படி கூறினார்.
இதையடுத்து பாலகுருவை சிக்க வைக்கும் எண்ணத்தில், பக்கத்து வீட்டில் வசிப்பவரின் அலைபேசி மூலம் சிறுமியை பேச வைத்து, பாலகுருசாமியின் பேச்சை பதிவு செய்தனர். இதையடுத்து டிச., 21ல் ஞானஒளிவுபுரம் சர்ச் அருகே அவரை வரவழைத்து பேசியபோது, சிறுமியிடமும் பாலியல் நோக்கில் நடக்க முயற்சித்தார்.
அங்கு வந்த சிறுமியின் சித்தி, தாத்தா ஆகியோர் பாலகுருசாமியை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பாலகுருசாமியை, போக்சோ சட்டத்தில் தெற்குவாசல் மகளிர் போலீசார் கைது செய்தனர்.

