/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பாலத்தில் நடந்தாலே, சும்மா அதிருதில்ல
/
பாலத்தில் நடந்தாலே, சும்மா அதிருதில்ல
ADDED : ஏப் 10, 2025 06:46 AM

மேலுார்: நாவினிபட்டியில் ஆதி திராவிட மக்களின் குடியிருப்புகளுக்கு செல்வதற்கு சிதிலமடைந்த பெரியாற்று கால்வாயை பயன்படுத்துவதால் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது.
புலிப்பட்டி - குறிச்சி பட்டி வரை முல்லை பெரியாறு ஒரு போக பாசன பகுதிக்கு 12 வது பிரதான கால்வாய் வழியாக தண்ணீர் செல்கிறது. இதில் நாவினிபட்டியில் ஏழாவது கிளை கால்வாய் வழியாக செல்லும் தண்ணீர் 5 கி.மீ., தொலைவில் உள்ள பெருமாள்பட்டி வரை செல்கிறது.
இத் தண்ணீரை பயன்படுத்தி ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. நாவினி பட்டியில் கால்வாயின் இருபுறங்களிலும் 1,500க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடியிருப்புகள் உள்ளன. இதன் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு கால்வாயை கடந்து செல்ல 30 ஆண்டுகளுக்கு முன் நீர்வளத் துறையினர் பாலம் அமைத்து கொடுத்துள்ளனர். தற்போது பாலம் சிதிலம் அடைந்துள்ளது.
அப்பகுதி மக்கள் கூறியதாவது: பாலம் முற்றிலும் சிதிலமடைந்து சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் துருப்பிடித்து வெளியே தெரிகிறது. பாலத்தின் மீது மக்கள் நடந்தாலும், வாகனங்களில் செல்லும்போதும் அதிர்வு ஏற்படுகிறது. அதனால் பாலத்தை அச்சத்துடனே கடக்கிறோம். புதிய பாலம் கட்டி தரும்படி நீர்வளத் துறையிடம் மனு கொடுத்தும் கண்டு கொள்ளவில்லை. பாலம் இடிந்து விழுந்து அசம்பாவிதம் ஏற்படும் முன் புதிய பாலம் கட்ட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
நீர்வளத்துறை செயற்பொறியாளர் சிவ பிரபாகர் கூறுகையில், ''பாலத்தை ஆய்வு செய்து புதிய பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

