/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நிரம்பும் சமுதாய கிணறுகளை பராமரிக்க வேண்டியது அவசியம்
/
நிரம்பும் சமுதாய கிணறுகளை பராமரிக்க வேண்டியது அவசியம்
நிரம்பும் சமுதாய கிணறுகளை பராமரிக்க வேண்டியது அவசியம்
நிரம்பும் சமுதாய கிணறுகளை பராமரிக்க வேண்டியது அவசியம்
ADDED : டிச 31, 2024 04:48 AM

உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், கைவிடப்பட்ட சமுதாய கிணறுகளில் நீர் நிரம்புகிறது. நெடுங்காலமாக தண்ணீரின்றி குப்பை தொட்டியாக மாறிய இக்கிணறுகளை பராமரிக்க ஊராட்சி நிர்வாகங்கள் முன்வரவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
1950 காலகட்டத்தில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், கிராமங்கள் தோறும் சமுதாய கிணறுகள் தோண்டி பராமரித்தனர். கால மாற்றத்தில் அடிகுழாய்கள், ஆழ்குழாய்கள், மோட்டார் பம்புகள் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து நிலத்தடி நீர்மட்டம் 800 அடிக்கும் கீழே சென்றது.
தொடர்ச்சியான மழைப்பொழிவு கிடைக்காததால் சமுதாய கிணறுகளில் தண்ணீர் வற்றிவிட்டன. இதனை மக்களே கைவிடும் அளவுக்கு நிலைமை மாறியது.
தொடர்ந்து பலகிராமங்களில் கோயில் விழாவில் கரகம், முளைப்பாரிகளை போடும் இடமாகவும், குப்பை கொட்டும் இடமாகவும் மாறிவிட்டது. சில கிராமங்களில் சமுதாய கிணறுகளை பாதுகாத்தும் வருகின்றனர்.
இப்பகுதியில் 3 ஆண்டுகளாக 58 கிராம கால்வாய் மூலம் தண்ணீர் கிடைக்கிறது. அடுத்தடுத்து மழைப்பொழிவும் இருந்ததால் உசிலம்பட்டி பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. கிராம, நகர் பகுதிகளில் சில அடிகள் தோண்டினாலே தண்ணீர் ஊற்றெடுக்கும் நிலை உள்ளது.
இந்நிலையில் கைவிடப்பட்ட தனியார், சமுதாய கிணறுகளில் தண்ணீர் மட்டம் உயர்ந்து வருகிறது. கிணறுகளில் குவிந்துள்ள குப்பையுடன் தேங்கும் நீரால் துர்நாற்றம், கொசுத்தொல்லை, சுகாதார கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே, கிணறுகளில் குப்பையை அகற்றி, பராமரிக்க உள்ளாட்சி நிர்வாகங்கள் முன்வரவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

