sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கோயிலில் வழிபட பட்டியலினத்தவருக்கு அனுமதி மறுப்பு; கலெக்டர், எஸ்.பி.,க்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

/

கோயிலில் வழிபட பட்டியலினத்தவருக்கு அனுமதி மறுப்பு; கலெக்டர், எஸ்.பி.,க்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

கோயிலில் வழிபட பட்டியலினத்தவருக்கு அனுமதி மறுப்பு; கலெக்டர், எஸ்.பி.,க்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

கோயிலில் வழிபட பட்டியலினத்தவருக்கு அனுமதி மறுப்பு; கலெக்டர், எஸ்.பி.,க்கு உயர்நீதிமன்றம் கண்டனம்


ADDED : செப் 18, 2025 04:43 AM

Google News

ADDED : செப் 18, 2025 04:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் மாரியம்மன் கோயிலில் பட்டியலினத்தவருக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் கலெக்டர், எஸ்.பி.,க்கு கண்டனம் தெரிவித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அவர்களை இடமாற்றம் செய்வது உள்ளிட்ட சரியான நடவடிக்கையை மாநில அரசு மேற்கொள்ளும் என எதிர்பார்ப்பதாக பதிவு செய்துள்ளது.

சின்னதாராபுரம் மாரியம்மன் கோயிலை திறந்து வழிபாடு நடத்த அனுமதிக்க மற்றும் அறங்காவலர்கள், கோயிலுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிடக்கோரி வன்னியகுல சத்திரியர் நல அறக்கட்டளை தலைவர் முருகன் மனுதாக்கல் செய்தார். பாகுபாடின்றி குறிப்பிட்ட பிரிவு மக்கள் உள்பட அனைவரும் வழிபட அனுமதிக்கக்கோரி மாரிமுத்து என்பவர் மற்றொரு மனு தாக்கல் செய்தார்.

ஏற்கனவே விசாரணையின்போது கலெக்டர் தரப்பில்,'கோயில் 2018 முதல் மூடப்பட்டுள்ளது. திருவிழா நடத்தவில்லை. பூஜை மட்டும் நடைபெறுகிறது. ஜாதி பதட்டம், சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. கோயில் மூடப்பட்டுள்ளது,' என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த இடைக்கால உத்தரவு:

கலெக்டரின் பதில் கண்டனத்திற்குரியது. சட்டம்- ஒழுங்கு பிரச்னை என்ற பெயரில் ஒரு பொது கோயிலை ஆண்டு கணக்கில் மூடி வைத்திருப்பது சரியல்ல. ஒரு பொதுக் கோயிலுக்குள் நுழைவதை ஜாதி அடிப்படையில் யாரும் தடுக்க முடியாது. இதில் யாராவது பிரச்னை உருவாக்க நினைத்தால், ஜாதி அடிப்படையில் மரியாதை கோர முயன்றால் அவர்கள் சட்ட ரீதியான நடவடிக்கைளை எதிர்கொள்ள நேரிடும். இரு தரப்பினரும் அதிகாரிகளுடன் ஒத்துழைக்க வேண்டும். அனைவரும் அமைதி, நல்லிணக்கத்தை பராமரிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.

மீண்டும் விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த இறுதி உத்தரவு:

கோயில் வழிபாட்டில் சமத்துவத்திற்கான போராட்டம் நீண்ட மற்றும் வேதனையான வரலாறு கொண்டது. திருவிதாங்கூரில் 1924-25ல் நடந்த வைக்கம் சத்தியாகிரகம் கோயிலுக்கு செல்லும் சாலைகளில் ஜாதி அடிப்படையிலான கட்டுப்பாடுகளுக்கு எதிரான முதல் போராட்டம். மலபாரில் 1931--32 ல் நடந்த குருவாயூர் சத்தியாகிரகத்தில் குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் வழிபட உரிமை கோரப்பட்டது. திருவிதாங்கூர் மகாராஜா 1936ல் கோயில் நுழைவு பிரகடனத்தை வெளியிட்டார். அதன் மூலம் ஜாதி வேறுபாடின்றி கேரளாவில் கோயில்கள் அனைத்து ஹிந்துக்களுக்கும் திறந்துவிடப்பட்டது.

இப்போராட்டங்கள் 1939 ல் மதுரையில் எதிரொலித்தன. அப்போதைய அரசால் சென்னை கோயில் நுழைவு அங்கீகாரம் மற்றும் இழப்பீட்டுச் சட்டம் (1939) பட்டியலின மக்களை கோயில்களில் அனுமதிக்கும் சட்டப்பூர்வ அதிகாரத்தை அறங்காவலர்களுக்கு வழங்கியது. இச்சட்டத்தின் கீழ்தான் 1939 ல் ஏ.வைத்தியநாத அய்யர், எல்.என்.கோபாலசாமி தலைமையிலான குழு, கக்கன் உள்ளிட்ட பட்டியலின பக்தர்களுடன் சேர்ந்து, முதன்முதலில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் நுழைந்தது. இதை மகாத்மா காந்தி ஒரு ஆன்மிக வெற்றியாக கருதினார். மீனாட்சி அம்மன் கோயிலில் ஹரிஜனங்களை நுழைய அனுமதித்தன் மூலம் ஹிந்து மதம் துாய்மைப்படுத்தப்பட்டதாக அவர் ஹரிஜனில் எழுதினார். அவர் 1946 ல் ஹரிஜன பக்தர்களுடன் மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்றார். இது அவரது வாழ்க்கையின் மிக திருப்திகரமான அனுபவங்களில் ஒன்றாக பதிவு செய்தார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் பட்டியலின பக்தர்கள் சென்றது நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இது பல நுாற்றாண்டுளாக நிகழ்ந்த ஒடுக்குமுறையை வெல்ல முடியும் என்பதற்கு சான்றாக அமைந்தது. மகாத்மா காந்தி ஜாதி வழிபாட்டை உடைத்து மகிழ்ந்த நிலத்தில் தற்போது சின்ன தாராபுரம் மாரியம்மன் கோயிலிலிருந்து பட்டியலின மக்கள் விலக்கி வைக்கப்பட்டுள்ள முரண்பட்ட காட்சியை காண நேர்ந்துள்ளது. இந்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவால் பட்டியலின மக்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நீதிமன்ற உத்தரவால் நுழைய அனுமதிக்கப்பட்டது பெருமைக்குரிய விஷயமல்ல. அவமானகரமானது.

அலங்கார பதவிகள் அல்ல மதுரையில் 1939ல் சமூக சீர்திருத்தவாதிகளின் தார்மீக உறுதி, தலைவர்களின் துணிச்சலால் அடைந்ததை, 2025ல் நீதிமன்ற உத்தரவு மூலமே சாத்தியமாகும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. கலெக்டர், எஸ்.பி.,எதற்காக இருக்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. அப்பதவிகள் அலங்கார பதவிகள் அல்ல; அரசியலமைப்பு பதவிகள். அரசியலமைப்பு வழங்கியுள்ள அதிகாரம், சலுகைகளை அனுபவிக்கும் அவர்கள் அடிப்படை உரிமைகளை நிறைவேற்ற மறுக்கின்றனர்.

கலெக்டர் இரு சமூகங்களுக்கிடையே சமாதானக் கூட்டம் நடத்தி, அறநிலையத்துறை அதிகாரிகளின் துணையுடன் அனைத்து ஜாதியினரும் பங்கேற்கும் வழிபாடு நடத்த ஏற்பாடு செய்திருக்க வேண்டும். அதை செய்யாமல் 7 ஆண்டுகளாக சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என கோயிலை பூட்டி வைத்தது சரியல்ல. கோயில்கள் பக்தர்களுக்காக திறந்திருப்பதை உறுதி செய்யும் கடமை எஸ்.பி.,க்கு உண்டு. பட்டியலின மக்கள் வழிபடுவதை தடுப்பவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். பதிலாக கோயிலை மூடியுள்ளனர்.

கலெக்டர் உறுதியாக செயல்பட்டிருந்தால், எஸ்.பி.,தனது சட்டப்பூர்வ கடமைகளை நிறைவேற்றியிருந்தால், 2018 முதல் கோயில் மூடப்பட்டிருக்காது. பக்தர்கள் வழக்குத் தொடராமல் தங்கள் உரிமைகளை அனுபவித்திருப்பார்கள். அவர்களின் செயலற்ற தன்மை நடுநிலைமை அல்ல; ஏமாற்றத்திற்குரிய செயல்.

கடும் கண்டனம் கலெக்டர், எஸ்.பி.,அரசியலமைப்பின் கடமையிலிருந்து முற்றிலும் விலகிச் சென்றுள்ளனர். அவர்கள் அமைதியைப் பாதுகாக்கவில்லை; மாறாக பாகுபாட்டை பாதுகாத்துள்ளனர். அவர்கள் உரிமைகளை பாதுகாக்கவில்லை; மாறாக மீறல்களை பாதுகாத்துள்ளனர். தங்கள் நடத்தையால் பதவிக்குரிய கடமைகளைச் செய்யத் தகுதியற்றவர்கள் என்பதை அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். இந்நீதிமன்றம் கடும் கண்டனத்தை பதிவு செய்கிறது. அவர்களை இடமாற்றம் செய்வது உள்ளிட்ட சரியான நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவிற்கு பின் கோயில் திறக்கப்பட்டது. பட்டியலின மக்கள் நுழைந்து வழிபட அனுமதிக்கப்பட்டனர். பிரச்னையில் ஈடுபட்டதாக 17 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அவர்களின் செயல் அரசியலமைப்புச் சட்டம், இந்நீதிமன்ற உத்தரவை மீறுவதாகும். இவ்வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும்.

அப்போதுதான் அரசியலமைப்பின் உரிமைகளைத் தடுப்பவர்கள் கடும் சட்ட விளைவுகளைச் சந்திக்க நேரிடும். எந்தவொரு நபரோ அல்லது குழுவோ இனி ஒருபோதும் ஜாதி அடிப்படையில் கோயில் நுழைவை மறுக்கத் துணியாத வகையில் சட்டம் உறுதியாக செயல்பட வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us