/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
காட்டு மாடுகளால் மக்காச்சோள பயிர்கள் சேதம்; சாணம்பட்டி விவசாயிகள் கவலை
/
காட்டு மாடுகளால் மக்காச்சோள பயிர்கள் சேதம்; சாணம்பட்டி விவசாயிகள் கவலை
காட்டு மாடுகளால் மக்காச்சோள பயிர்கள் சேதம்; சாணம்பட்டி விவசாயிகள் கவலை
காட்டு மாடுகளால் மக்காச்சோள பயிர்கள் சேதம்; சாணம்பட்டி விவசாயிகள் கவலை
ADDED : டிச 30, 2025 07:07 AM

வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே சாணம்பட்டியில் காட்டு மாடுகளால் தொடர்ந்து மக்காச்சோள பயிர்கள் சேதமாகி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
சிறுமலை அடிவாரத்தை ஒட்டிய இப்பகுதியில் மானாவாரி, கிணற்று பாசனத்தில் 100 ஏக்கருக்கு மேலாக மக்காச்சோளம், சோளம், பூ, காய்கறி வகைகள் பயிரிடப்படுகிறது. இங்கு முகாமிட்டுள்ள காட்டு மாடு, பன்றிகள் இரவு நேரங்களில் கூட்டமாக படையெடுத்து பயிர்களை சேதப்படுத்தி செல்கின்றன. இதனால் மக்காச்சோளம் சாகுபடி 150ல் இருந்து 20 ஏக்கராக குறைந்துவிட்டது என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
விவசாயி ஜீவகன்: என் தந்தை இரண்டரை ஏக்கரில் அடி உரம், உழவு, விதை, மருந்து என ரூ.40 ஆயிரம் செலவில் மக்காச்சோளம் விதைத்தார். முளைக்கும் போதே படைப்புழு பூச்சித் தாக்குதல் இருந்தது. 40 நாட்களாகியும் வளர்ச்சியில் மாறுதல் இல்லை. விரக்தியால் தந்தை கூலி வேலைக்கு சென்று விட்டார். காட்டு மாடு, பன்றிகளாலும் தொல்லை உள்ளது. இரவு தோட்டத்தில் காவல் காக்க முடியவில்லை என்றார்.
முத்துச்சாமி: கூட்டமாக வரும் காட்டு மாடுகள் நாய், பசு மாடுகளை காயப்படுத்தி உள்ளன.
அச்சத்துடன் விவசாயம் செய்து வாழ்கிறோம். வனத்துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. வயலை சுற்றி சேலை, வேலி அமைத்தும் பயனில்லை என்றார்.
விவசாயி நாகு: மயில், காட்டுப்பன்றி, காட்டு மாடுகள் தொல்லையால் பூ, காய்கறி விவசாயத்தை 6 ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்தி விட்டேன்.
வளர்க்கும் பசு மாடுகளுக்கான சோளம், சீமை புல் குறைந்த அளவில் வளர்க்கிறேன். புழு பூச்சி நோய் தாக்குதல், வனவிலங்குகள் தொல்லையால் விவசாயத்தை கைவிடும் நிலை உள்ளது என்றார்.

