ADDED : ஏப் 05, 2026 10:51 PM
பேரையூர்: பேரையூர் பகுதியில் மழை இல்லாததால் மாங்காய்கள் சிறுத்து மகசூல் கடுமையாக பாதித்துள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
பேரையூர், சாப்டூர், பழையூர், வண்டாரி, சந்தையூர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் மா சாகுபடி செய்கின்றனர். இதற்கு தண்ணீர் அதிகம் தேவையில்லை. வறட்சியை தாங்கி வளரும். உரம் , பூச்சிக் கொல்லி மருந்தும் குறைவாகவே தேவைப்படும்.
டிசம்பர் முதல் ஜனவரி வரை பூப்பூத்து மார்ச், ஏப்ரல் மாதங்களில் அறுவடை செய்வர். சாகுபடி செய்துள்ள காசா லட்டு, சப்பட்டை, செந்துாரம், கல்லாமை, பங்கனப்பள்ளி உள்ளிட்ட ரக மரங்களில் காய்த்து தொங்கிய காய்கள் தொடர்ந்து மழை இல்லாததால் சிறுத்துப்போக தொடங்கின. இந்தக் காய்களை பயன்படுத்த முடியுமா என்பது தெரியவில்லை.
மா விவசாயிகள் கூறுகையில், ''கடந்த மாதம் மா மரங்களில் காய் விளைச்சல் ஆரம்பமானது. மழை இல்லாததால் அது சிறுத்துப் போய் உள்ளது. பிஞ்சுகள் உதிர்ந்தும் 25 சதவீத காய்கள் தான் மிஞ்சியது. அதுவும் சிறுத்துப் போனதால் இந்தாண்டு என்னாகப் போகிறதோ தெரியவில்லை என்றனர்.
