ADDED : பிப் 14, 2024 04:45 AM

அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் ஒன்றிய அலுவலக வளாகத்தில் பயன்பாட்டில் இல்லாத பழமையான வேளாண் அலுவலக கட்டடம் இடியும் அபாய நிலையில் உள்ளது.
இந்த வளாகத்தில் செயல்பட்ட வேளாண் அலுவலகம் சேதமடைந்ததால், அதனருகே மாற்று கட்டடத்தில் தற்போது செயல்பட்டு வருகிறது. 15 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் இல்லாத இந்த அபாய கட்டடம் அருகே உள்ள, புதிய கட்டடங்களும் பாதிக்கும் நிலை உள்ளது. இதன் அருகே புதிதாக கட்டப்பட்ட மகளிர் சுய உதவி குழு உள்ளிட்ட கட்டடங்கள் செயல்பட்டு வருகின்றன.
மேலும் பழுதடைந்த கட்டடத்தின் முன்பாக கட்டுமானத்திற்கு பயன்படுத்தும் ரூ.பல லட்சம் மதிப்பிலான கம்பிகள் பல ஆண்டுகளாக இருப்பு வைக்கப்பட்டு துருப்பிடித்து வருகிறது. இதனால் அரசு நிதி வீணடிக்கப்படுகிறது. பழுதடைந்த கட்டடத்தை அகற்றவும், கம்பிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

