ADDED : மார் 06, 2026 05:22 AM

சோழவந்தான்: சோழவந்தான் அருகே சி.புதுாரில் சமுதாயக் கூடம் பராமரிப்பில்லாத தால் இடிந்து விழும் அபாயம் உள்ளது.
அப்பகுதி காளியப்பன் கூறியதாவது:
இங்கு 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மந்தை அருகே பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சமுதாயக் கூடம் உள்ளது. இது முறையாக பராமரிக்கப்படாததால் கட்டடத்தின் பல பகுதிகளில் விரிசல் விழுந்துள்ளது. காரை பெயர்ந்து கம்பிகள் வெளியில் தெரிகின்றன.
ஜன்னல்களின் மேல் பக்கவாட்டு சிலாப்புகள் எப்போது வேண்டு மானாலும் விழுந்து விபரீதம் விளைய வாய்ப்பு உள்ளது.
மாடியில் விழும் மழைநீரை கடத்தும் பைப்லைன்கள் மோசமாக சேதமடைந்துள்ளன. கட்டடத்திலேயே தண்ணீர் தேங்கி மேல்தளம் வலிமை இழந்த நிலையில் உள்ளது.
அருகே ஊராட்சி கட்டடம் கட்டுவதற்காக சமுதாய கூடத்தின் மாடி படிக்கட்டு இடிக்கப் பட்டது. இதனால் மாடிக்குச் சென்று பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள முடியவில்லை. போதுமான கழிவறை வசதியும் கிடையாது. 'பெயின்ட்' அடிக்காததால் கட்டடம் பாசி படர்ந்து நிறம் மாறி வருகிறது. கதவுகள் துருப்பிடித்து சேதம் அடைந்து வருகின்றன. ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

