/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தி.மு.க., ஆட்சியில் எந்த துறையும் சிறப்பாக செயல்படவில்லை: அ.தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் குற்றச்சாட்டு
/
தி.மு.க., ஆட்சியில் எந்த துறையும் சிறப்பாக செயல்படவில்லை: அ.தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் குற்றச்சாட்டு
தி.மு.க., ஆட்சியில் எந்த துறையும் சிறப்பாக செயல்படவில்லை: அ.தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் குற்றச்சாட்டு
தி.மு.க., ஆட்சியில் எந்த துறையும் சிறப்பாக செயல்படவில்லை: அ.தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் குற்றச்சாட்டு
ADDED : ஜூலை 24, 2024 05:54 AM

மதுரை : ''தி.மு.க., ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் எந்த துறையும் சிறப்பாக செயல்படவில்லை' என மதுரையில் நடந்த அ.தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டது.
மின் கட்டணத்தை உயர்த்திய தி.மு.க., அரசை கண்டித்து மதுரை முனிச்சாலையில் நகர் அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ பேசியதாவது:
தி.மு.க., ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் எந்த துறையும் சிறப்பாக செயல்படவில்லை. செய்ததாக விளம்பரப்படுத்துகிறார்கள். தரமற்ற ரேஷன் அரிசியை கோழிகூட சாப்பிட மறுக்கிறது. வரிக்குதிரையில் உள்ள வரிகளை கூட எண்ணிவிடலாம். ஆனால் தி.மு.க., அரசு போட்ட வரிகளை எண்ணவே முடியாது. மாதம் ஒருமுறை மின் கட்டணம் செலுத்த ரீடிங் எடுக்கப்படும் என்றனர். செய்தார்களா.
'நாங்கள் சொன்னதை மட்டுமல்ல. சொல்லாததையும் செய்வோம்' என முதல்வர் ஸ்டாலின் கூறி வருகிறார். அப்படிதான் மின்கட்டண உயர்வை சொல்லாமலேயே உயர்த்திஇருக்கிறார். லோக்சபா தேர்தலில் 40க்கு 40 வெற்றி கிடைத்ததால் மின் கட்டணத்தை 5 சதவீதம் உயர்த்தி இருக்கிறார்.
சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. 200 நாட்களில் 595 கொலைகள் நடந்துள்ளன. மதுரையில் 22 நாட்களில் 13 கொலைகள் நடந்துள்ளன. 'டைம் பாஸ்'க்காக கொலை செய்கிறார்கள். போலீஸ் மீது ரவுடிகளுக்கு பயம் போய்விட்டது. அரசு மீது போலீசிற்கு பயம் போய்விட்டது. ஆட்சி நிர்வாகம் அப்படி இருக்கிறது. திருட்டும் அதிகரித்துவிட்டது. குறைந்தது 50 பவுன் முதல் 200 பவுன் வரை அடித்து போய்விடுகிறார்கள்.
சொத்து வரி, பால், விலைவாசியை உயர்த்தி மக்களுக்கு தி.மு.க., அரசு 'ஷாக்' கொடுத்தது. 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வுக்கு மக்கள் 'ஷாக்' கொடுக்க வேண்டும். 'பி.ஏ., பட்டம் தி.மு.க., போட்ட பிச்சை' என ஆர்.எஸ். பாரதி பேசியிருக்கிறார். தி.மு.க., ஆட்சிக்கு வந்தது மக்கள் போட்ட பிச்சையால்தான் என்பதை மறந்துவிட்டார்கள். இவ்வாறு பேசினார். முன்னாள் எம்.எல்.ஏ., டாக்டர் சரவணன், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் சோலைராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருப்பரங்குன்றம்
புறநகர் கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா பேசியதாவது:
தி.மு.க., ஆட்சி அமைந்தது முதல் தமிழக மக்களை கசக்கிப்பிழிந்து தான் வருகிறது. 2011ல் அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பு ஏற்கும்போது தமிழகத்தில் கடும் மின் தட்டுப்பாடு இருந்தது. ஜெயலலிதாவின் சீர்மிகு நடவடிக்கையால் மின்மிகை மாநிலமாக மாற்றி அண்டை மாநிலங்களுக்கு மின்சாரத்தை வழங்கும் மாநிலமாக உருவாக்கி காட்டினார். பத்தாண்டு தமிழகம் மின்மிகை மாநிலமாக இருந்தது. மின் கட்டணம் உயர்வால் முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு போவார். பழனிசாமி கோட்டைக்கு போவார் என்றார். எம்.எல்.ஏ., பெரிய புள்ளான், நிர்வாகிகள் ராஜேந்திரன், ஓம்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கள்ளிக்குடி
மதுரை மேற்கு மாவட்டம் கள்ளிக்குடியில் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மகேந்திரன், சரவணன்,மாணிக்கம், கருப்பையா, ஜெ., பேரவை மாநில துணைச் செயலாளர் வெற்றிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசியதாவது:
மின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்காமல் தனியாரிடமிருந்து கூடுதல் விலைக்கு ரூ. 65,000 கோடி அளவுக்கு மின்சாரத்தை வாங்குவதால்தான் இந்த மின் கட்டண உயர்வு. சிறு, குறுந்தொழில்கள் முடங்கும் அபாயம் உள்ளது. அம்மா உணவகத்தை 3 ஆண்டுகளுக்கு பிறகு முதல்வர் ஆய்வு செய்ய வந்தது என்ன காரணம். அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் எல்லாம் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் கிடப்பில் போட்டு விட்டீர்கள். அ.தி.மு.க., ஆட்சியில் இருந்த 10 ஆண்டுகாலம் திருமங்கலம் உள்ளூர் மக்கள் டோல்கேட் கட்டணம் இன்றி பயணம் செய்தார்கள். தற்போது கட்டணம் வசூலிப்பதால் பல கட்ட போராட்டம் நடக்கிறது. அரசு விரைவில் நல்ல முடிவு எடுக்கவில்லை என்றால் பெரிய அளவில் போராட்டம் நடைபெறும் என்றார்.

