ADDED : ஏப் 24, 2024 06:23 AM
மதுரை : சித்திரைத் திருவிழாவில் அழகர் வைகையில் எழுந்தருளியபின், வடகரையில் உள்ள ஸ்ரீகிருஷ்ணவிலாச பலிஜ சபையின் புராதன மண்டபத்தில் எழுந்தருள்வார். கூட்டநெரிசலை காரணம் காட்டி கடந்தாண்டு அழகரை இங்கு அழைத்து வராமல் சென்றனர். இந்தாண்டும் பக்தர்கள் தயாராக இருந்த நிலையில் அழகர் வரவில்லை.
சபைத் தலைவர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: வைகையில் எழுந்தருளிய அழகர், வழக்கப்படி எங்கள் மண்டபத்திற்கு வராமல் ஆழ்வார்புரத்திற்குள் சென்றுவிட்டார். மண்டபம் முன் சவுக்கு கட்டைகளை கட்டி சுவாமி மண்டபத்திற்கு வருவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி ஏமாற்றிவிட்டனர்.
கூட்டத்தை ஒழுங்குபடுத்தி உரிய கட்டணம் செலுத்திய மண்டபத்தில் சுவாமியை எழுந்தருளச் செய்வது போலீஸ், அறநிலையத்துறை கடமை. பக்தர்களை ஏமாற்றுவது சட்டப்படி தவறு. போலீசார், அறநிலையத்துறை மீது முதல்வர் ஸ்டாலின நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

