/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சர்வதேச குற்றவாளிகளை கண்டறிய ஒருங்கிணைந்த தொழில்நுட்ப திட்டம் மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அமைகிறது
/
சர்வதேச குற்றவாளிகளை கண்டறிய ஒருங்கிணைந்த தொழில்நுட்ப திட்டம் மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அமைகிறது
சர்வதேச குற்றவாளிகளை கண்டறிய ஒருங்கிணைந்த தொழில்நுட்ப திட்டம் மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அமைகிறது
சர்வதேச குற்றவாளிகளை கண்டறிய ஒருங்கிணைந்த தொழில்நுட்ப திட்டம் மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அமைகிறது
ADDED : ஆக 29, 2024 10:33 PM
மதுரை:குற்றங்கள், பயங்கரவாத செயல்களை தடுக்க 28 புலனாய்வு அமைப்புகளை ஒருங்கிணைத்து வெளி மாநில, சர்வதேச குற்றவாளிகளின் விபரங்களை கண்டறியும் தகவல் தொழில்நுட்ப திட்டத்தை மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செயல்படுத்தும் பணி நடந்து வருகிறது.
இந்தியாவில் பயங்கரவாதிகள் அச்சுறுத்தலை தடுக்கவும், சட்டம் ஒழுங்கை காக்கவும் பல்வேறு புலனாய்வு அமைப்புகள் உள்ளன. இவை தனித்தனியே மதரீதியாக, கொள்கை ரீதியானவர்களை கண்காணிக்கின்றன.
வெளிமாநில பயங்கரவாதிகள், இந்தியாவில் தங்கியுள்ள வெளிநாட்டவரின் செயல்பாடுகளை கண்காணிக்கும் சிறப்பு பிரிவும் உள்ளது. அதேபோல் ஒவ்வொரு மாநிலத்திலும் ரவுடிகள், திருடர்கள், நக்சைலட்டுகள் போன்றவர்களை கண்காணிக்க சிறப்பு பிரிவுகள் செயல்படுகின்றன.
ஒரு மாநிலத்தைச் சேர்ந்த ரவுடியோ, பயங்கரவாதியோ மற்றொரு மாநிலத்தில் கைது செய்யப்படும் போது அவர்கள் குறித்த விபரங்களை சேகரிப்பது போலீசாருக்கு சிரமமாக உள்ளது.
ஒவ்வொரு முறையும் சம்பந்தப்பட்ட மாநில அரசை தொடர்பு கொண்டு விபரம் கேட்க வேண்டியுள்ளது. இதில் பல்வேறு நடைமுறை சிக்கல் உள்ளதால் சில சமயம் போலீசார் போதிய விபரங்களை சேகரிக்க முடியாமல் நீதிமன்றத்தின் கண்டிப்புக்கு ஆளாகின்றனர்.
இதை தவிர்க்க மத்திய அரசு 'ஸ்மார்ட்' எனும் ஒருங்கிணைந்த தகவல் தொழில் நுட்ப திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது. தமிழகத்தில் மதுரை, சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் பயன்பாட்டிற்கு வருகிறது. மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இதற்கான பணி நடந்து வருகிறது.
இத்திட்டத்தில் தேசிய அளவில் உள்ள 28 புலனாய்வு அமைப்புகள் இணைக்கப்பட்டுள்ளன. மதுரையில் சந்தேகத்திற்குரிய வெளிநாடு அல்லது வெளிமாநில நபரை கைது செய்யும்போது அவர் குறித்த முழு விபரங்களையும் இத்திட்டத்தில் போலீசார் பெறமுடியும்.
புதிய குற்றவாளிகள் என்றால் அவர்கள் குறித்த விபரங்களை மற்ற மாநிலங்கள், புலனாய்வு அமைப்புகள் அறியும் வகையில் 'அப்டேட்' செய்யும் வசதியும் உள்ளது.
அனைத்து மாநிலங்கள், புலனாய்வு அமைப்புகள் இடையே குற்றங்களை தடுக்க ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கையாக இத்திட்டம் இருக்கும் என, போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

