/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அஞ்செட்டி மாணவன் கொலையில் அலட்சியம் பணியில் இருப்பதாக கூறிய இன்ஸ்பெக்டர் இடமாற்றம்
/
அஞ்செட்டி மாணவன் கொலையில் அலட்சியம் பணியில் இருப்பதாக கூறிய இன்ஸ்பெக்டர் இடமாற்றம்
அஞ்செட்டி மாணவன் கொலையில் அலட்சியம் பணியில் இருப்பதாக கூறிய இன்ஸ்பெக்டர் இடமாற்றம்
அஞ்செட்டி மாணவன் கொலையில் அலட்சியம் பணியில் இருப்பதாக கூறிய இன்ஸ்பெக்டர் இடமாற்றம்
ADDED : ஜூலை 24, 2025 02:09 AM
தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி அருகே, பள்ளி மாணவன் கடத்தி கொலை சம்பவத்தில், பணியில் அலட்சியமாக இருந்ததாகவும், பணியில் இருப்பதாக கூறி விட்டு, எவ்வித தகவலும் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் வெளியூர் சென்ற இன்ஸ்பெக்டரும், நடந்த சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காத தனிப்பிரிவு போலீஸ்காரரும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே மாவனட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவராஜ்,46; கூலித்தொழிலாளி. இவரது மகன் ரோகித்,13. அஞ்செட்டி அரசு பள்ளியில், 8ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த, 2ம் தேதி அவரை காரில் கடத்திய மர்ம நபர்கள், அவரை கொலை செய்து அஞ்செட்டி - தேன்கனிக்கோட்டை சாலையிலுள்ள திருமுடுக்கு கொண்டை ஊசி வளைவில், 50 அடி பள்ளத்தில், அவரது சடலத்தை வீசி சென்றனர்.
போலீசார் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி, மாணவனின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். அதன் பின், கொலை தொடர்பாக, மாவனட்டியை சேர்ந்த புட்டண்ணன் மகன் மாதேவன், 21, அவரது காதலியான, 18 வயது கல்லுாரி மாணவி மற்றும் கர்நாடகா மாநிலம், உன்சனஹள்ளியை சேர்ந்த மாரப்பன் மகன் மாதேவன், 21, ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர்.
மாணவன் கடத்தப்பட்டதாக கடந்த, 2ம் தேதி இரவு, 11:00 மணிக்கு, போலீசின் அவசர உதவி எண்ணான, 100க்கு மாணவனின் உறவினர்கள் போன் செய்தனர். இரவு பணியிலிருந்த தலைமை காவலர் சின்னதுரை விசாரணைக்கு அனுப்பப்பட்டார். உறவினர்களிடம் அவர், 'மாணவனை கடத்த அவன் என்ன கோடீஸ்வரனா' என கேட்டதாக குற்றஞ்சாட்டினர். பணியில் அலட்சியமாக இருந்ததால், தலைமை காவலர் சின்னதுரை, ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.
போலீசார் அலட்சியமாக செயல்பட்டது குறித்து, மாவட்ட எஸ்.பி., தங்கதுரை விசாரித்தார். இதில் கடந்த, 2ம் தேதி இரவு, அஞ்செட்டி இன்ஸ்பெக்டர் பங்கஜம், பணியில் இருப்பதாக கூறியுள்ளார். ஆனால், அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெறாமல் வெளியூர் சென்றது தெரியவந்தது. அதே நேரம், எஸ்.ஐ., மற்றும் போலீசார் யாரும் ஸ்டேஷனில் பணியில் இல்லாததும் தெரியவந்தது. அதனால் தான், மாணவன் கடத்தலில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது தெரியவந்தது.
மேலும் அஞ்செட்டி இன்ஸ்பெக்டர் பங்கஜம் மீது நடவடிக்கை எடுக்க, மாணவனின் தந்தை மற்றும் உறவினர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து அவர், ஓசூர் அனைத்து மகளிர் ஸ்டேஷனுக்கும், இங்கு பணியாற்றிய இன்ஸ்பெக்டர் சுமித்ரா, அஞ்செட்டி ஸ்டேஷனுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
அதேபோல், எஸ்.பி., தனிப்பிரிவு காவலராக இருந்த சுதாகர், மாணவன் கடத்தப்பட்டது, கொலை செய்து சடலத்தை வீசியது தொடர்பாக எந்த வித தகவலையும் உயர் அதிகாரிகளுக்கு உடனுக்குடன் தெரிவிக்கவில்லை. இதனால், அவர் தளி ஸ்டேஷனில் ரெகுலர் பணிக்கு மாற்றப்பட்டார். ஆயுதப்
படைக்கு மாற்றப்பட்ட தலைமை காவலர் சின்னதுரை, ஓசூர் டவுன் ஸ்டேஷனில், தற்போது பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்.

