ADDED : ஏப் 29, 2024 07:34 AM
ஓசூர் : ஓசூரிலுள்ள பழைய பெங்களூரு சாலையில், தனியார் லாட்ஜ் இயங்கி வருகிறது. இங்கு நேற்று முன்தினம் இரவு, 150 க்கும் மேற்பட்ட மக்கள் தங்கியிருந்தனர். நேற்று அதிகாலையில் லாட்ஜின், 2வது மாடியில் உள்ள வரவேற்பு அறையில் திடீரென மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. சுவிட்ச் போர்டில் தீப்பற்றி, அருகிலுள்ள மற்ற அறைகளுக்கும் பரவ துவங்கியது. 2வது மாடி முழுவதும் கடும் புகைமூட்டமாக காட்சியளித்தது.
அதிகாலை நேரத்தில் நல்ல துாக்கத்தில் இருந்த மக்களை, லாட்ஜ் ஊழியர்கள் சத்தம் போட்டு எழுப்பி, வேகமாக வெளியேற அறிவுறுத்தினர். அறையில் தங்கியிருந்தவர்கள் தங்களது பொருட்களை எடுத்தும், எடுக்காமலும் தப்பியோடினர். ஓசூர் தீயணைப்புத் துறையினர், இரு வாகனங்கள் மூலம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஓசூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

