/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தர்மபுரி, கிருஷ்ணகிரி செய்திகள்
/
தர்மபுரி, கிருஷ்ணகிரி செய்திகள்
ADDED : மார் 30, 2024 03:27 AM
கும்பாபிேஷக விழா
தர்மபுரி: குன்செட்டிஹள்ளி கருப்பண்ண சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா கடந்த, 22ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. 23ல், காப்பு கட்டுதல், கணபதி ஹோமம், 24ல், இரண்டாம் கால யாக பூஜை, தீபாராதனையும் நடந்தது. முக்கிய நாளான நேற்று, கருப்பண்ண சுவாமிக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பறிமுதல் செய்த ரூ.5.51 லட்சம்
உரியவர்களிடம் ஒப்படைப்பு
பாப்பிரெட்டிப்பட்டி: பொம்மிடி ஆர்.எம். நகர் ரோட்டில் உள்ள சோதனை சாவடியில், தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அலுவலர் மகேஸ்வரி தலைமையில் கடந்த, 22ல் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பைக்கில் வந்த, பொம்மிடி அடுத்த மணிபுரத்தை சேர்ந்த தனியார் பைனான்ஸ் ஊழியர் மோகன் உரிய ஆவணமின்றி எடுத்து வந்த, 4.50 லட்சம் ரூபாய், வாசிகவுண்டனூரை சேர்ந்த அருண் ஆவணமின்றி எடுத்த வந்த, 1.01 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்து சார் கருவூலத்தில் ஒப்படைக்கபட்டது.
இதையடுத்து கலெக்டரிடம் மோகன், அருண் ஆகியோர் மனு செய்தனர். பின் மேல்முறையீடு குழுவிடம் விளக்கம் அளித்தனர். மேல் முறையீடு குழு உத்தரவின் படி, உதவி தேர்தல் அலுவலர் செர்லிஏஞ்சலா, தாசில்தார்கள் சரவணன், பெருமாள், தேர்தல் துணை தாசில்தார் சிவஞானம் ஆகியோர் மோகன், அருணிடம், 5,51,800 ரூபாயை வழங்கினர்.
நொரம்பு மண் கடத்த
முயற்சி: 2 பேர் கைது
பாப்பிரெட்டிப்பட்டி: பொம்மிடி அடுத்த, வேப்பாடி ஆற்றின் புறம்போக்கு நில பகுதியில் நேற்று முன்தினம் மாலை, நொரம்பு மண்ணை வெட்டி சிலர் கடத்த முயற்சி செய்வதாக பொ.மல்லாபுரம் வி.ஏ.ஓ., மணி பொம்மிடி போலீசில் புகார் செய்தார். இதையடுத்து எஸ்.ஐ., விக்னேஷ் உள்ளிட்ட போலீசார் வேப்பாடி ஆற்றின் பகுதிக்கு சென்று, டிராக்டர் மூலம் நொரம்பு மண்ணை வெட்டி எடுத்து கடத்த முயன்ற விஜயநகரம் பகுதியை சேர்ந்த டிரைவர்கள் பூவரசன், 27, இவரது தம்பி ஹரிஷ், 22, ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
விபத்தில் ரயில்வே ஊழியர் பலி
பாப்பிரெட்டிப்பட்டி: பொம்மிடி அடுத்த மோட்டாங்குறிச்சியை சேர்ந்தவர் நாராயணன் மகன் அருண், 29. இவர் பொம்மிடி அடுத்த பிளாக்ஹட் ஸ்டேஷனில் கேங் எண் 3ல், டிராக்மேனாக பணியாற்றி வந்தார். இவர் மற்ற ஊழியர்களுடன் நேற்று முன்தினம் மதியம், 2:30 மணியளவில் தர்மபுரி மாவட்டம் பொம்மிடி - -புட்டிரெட்டிப்பட்டி ரயில்வே ஸ்டேஷன் இடையே ரயில் பாதையில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது, சேலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற கூட்ஸ் ரயில் எதிர்ப்பாராதவிதமாக அருண் மீது மோதியது. இதில், அவர் துாக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்தார். உடனடியாக, அங்கிருந்த ரயில்வே ஊழியர்கள், அதே கூட்ஸ் ரயிலில் அவரை ஏற்றிக் கொண்டு மொரப்பூர் ரயில்வே ஸ்டேஷன் சென்றனர். அங்கு வந்த மொரப்பூர் மருத்துவ ஊழியர்கள், அவரை பரிசோதனை செய்தனர். இதில் அருண் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர்.
இதையடுத்து, மொரப்பூர் ரயில்வே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போக்குவரத்து சம்மேளன கூட்டம்
தர்மபுரி, மார்ச் 30-
தர்மபுரி, மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி., போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம், மண்டல தலைவர் பூபேஸ்குப்தா தலைமையில் நடந்தது. இதில், போக்குவரத்து துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 15-வது ஊதியக்குழு பேச்சுவார்த்தையை உடனடியாக நடத்தி, போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு, நிலுவையிலுள்ள அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
இதில், மண்டல பொது செயலாளர் நாகராசன், போக்குவரத்துக் கழக சம்மேளன பொதுச் செயலாளர் ஆறுமுகம், துணைசெயலாளர் முருகராஜ், ஏ.ஐ.டி.யூ.சி., மாநில துணைத்தலைவர் மணி, சம்மேளன துணைத்தலைவர் ரவி, உட்பட பலர் பங்கேற்றனர்.

