ADDED : மே 03, 2026 01:46 AM

கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், நெல் வயல்களுக்கு போர்வெல் மூலம் தண்ணீர் பாய்ச்சப்பட்டு, பசுமையாக வளர்ந்து வருகிறது.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மாயனுார், திருக்காம்புலியூர், மகாதானபுரம், சிந்தலவாடி, மகிளிப்பட்டி, பிள்ளபாளையம், வீரகுமாரன்பட்டி, வீரவள்ளி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்தனர். அறுவடைக்கு பிறகு இரண்டாம் கட்டமாக, கடந்த மாதம் நெல் வயல்களில், உழவு பணி செய்து குறுவை நெற்பயிர்கள் நடவு செய்யப்பட்டது. பின்னர் அவை செழிப்பாக வளர, விவசாய தொழிலாளர்களை கொண்டு களை அகற்றப்பட்டது. தற்போது பசுமையாக நெற்பயிர்கள் வளர்ச்சி அடைந்து வருகிறது.
இந்நிலையில், காவிரி படுகையில் மழை இல்லாததால் ஆறுகளில் நீர் மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. குடிநீருக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நடவு செய்யப்பட்ட குறுவை சாகுபடி நெல் வயல்களுக்கு, விவசாயிகள் பயிர்களை காப்பதற்காக கிணறு மற்றும் போர்வெல் மூலம் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். இதனால் விவசாயிகளுக்கு செலவு அதிகரித்துள்ளது. அதிகமான வெப்பம் தொடர்ந்து இருப்பதால், பயிர்களின் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். மழை பெய்தால் நெல் பயிர்கள் நன்கு வளர்ச்சி அடைந்து மகசூல் கிடைக்கும்.
