பள்ளப்பட்டியில் அடிப்படை வசதிகளை செய்து தர பொதுமக்கள் வலியுறுத்தல்
பள்ளப்பட்டியில் அடிப்படை வசதிகளை செய்து தர பொதுமக்கள் வலியுறுத்தல்
ADDED : செப் 27, 2026 06:59 AM

அரவக்குறிச்சி:பள்ளப்பட்டி
நகராட்சிக்குட்பட்ட, 6வது வார்டில் ஒலிஷா நகர் அமைந்துள்ளது.
இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு ஏற்ப, அடிப்படை வசதிகள்
மேம்படுத்தப்படவில்லை.
சாலை முழுவதும் குண்டும் குழியுமாக
இருப்பதால், பள்ளிக்கு செல்வோர், முதியவர்கள், கர்ப்பிணிகள்
சிரமப்படுகின்றனர். தெரு விளக்குகள் இல்லாததால் வெளிச்சமின்மை
மற்றும் பள்ளங்கள் காரணமாக, இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி
விழுகின்றனர்.
மேலும் இப்பகுதியில் சிறிதளவு மழை பெய்தாலும்,
பள்ளங்களில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளிப்பதால்,
பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக
வேதனை தெரிவிக்கின்றனர்.
சாலை வசதி கேட்டு இப்பகுதி மக்கள்
சார்பில், நகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை
எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. எனவே, பள்ளப்பட்டி
நகராட்சி அதிகாரிகள், இப்பிரச்னையில் உடனடியாக தலையிட்டு, ஒலிஷா
நகர் பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான புதிய தார்ச்சாலை
அமைப்பது உள்பட அடிப்படை தேவைகளை உடனடியாக தொடங்க வேண்டும் என
கோரிக்கை விடுத்துள்ளனர்.
