/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆயுத பூஜையை முன்னிட்டு கோவில், வர்த்தக நிறுவனங்களில் பூஜை
/
ஆயுத பூஜையை முன்னிட்டு கோவில், வர்த்தக நிறுவனங்களில் பூஜை
ஆயுத பூஜையை முன்னிட்டு கோவில், வர்த்தக நிறுவனங்களில் பூஜை
ஆயுத பூஜையை முன்னிட்டு கோவில், வர்த்தக நிறுவனங்களில் பூஜை
ADDED : அக் 12, 2024 01:10 AM
ஆயுத பூஜையை முன்னிட்டு கோவில், வர்த்தக நிறுவனங்களில் பூஜை
கரூர், அக். 12-
ஆயுத பூஜையையொட்டி, கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. வர்த்தக நிறுவனங்களிலும், ஆயுதபூஜை கொண்டாடப்பட்டது.
இந்துக்களின் முக்கிய திருவிழாவான ஆயுத பூஜை, ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில், தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், அனைத்து வர்த்தக நிறுவனங்களிலும், வியாபாரம் மெல்ல மெல்ல சூடு பிடித்துள்ளது. தொழில் நகரான கரூரில் நேற்று ஆயுத பூஜையையொட்டி, ஜவுளி நிறுவனம், கொசுவலை நிறுவனம் மற்றும் பஸ் பாடி கட்டும் நிறுவனங்கள், ஆட்டோ ஸ்டாண்ட், வேன் ஸ்டாண்டுகளில் ஆயுத பூஜை விழா நடந்தது.
மேலும், அரசு அலுவலகங்கள், தீயணைப்பு நிலையம் மற்றும் போலீஸ் ஸ்டேஷன்களிலும் ஆடம்பரம் இல்லாமல், நடப்பாண்டு ஆயுதபூஜை விழா கொண்டாடப்பட்டது.
மேலும், ஆயுத பூஜை விழாவையொட்டி கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில் நேற்று சிறப்பு அபிேஷகம், மஹா தீபாராதனை நடந்தது. கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், மாரியம்மன் கோவில், காமாட்சியம்மன் கோவில், தான்தோன்றிமலை வெங்கடரமண சுவாமி கோவில், சின்ன ஆண்டாங்கோவில் அங்காளம்மன் கோவில் உள்ளிட்ட, பல்வேறு கோவில்களில் பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.
* அரவக்குறிச்சி, காசி விஸ்வநாதர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மேலும் அரவக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதியிலுள்ள கோவில்களில், சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. காலையில் நீராடி பூஜை அறையை சுத்தம் செய்து, சரஸ்வதிக்கு வெண்தாமரை, வெண்ணிற மலர்களை சூட்டி அலங்கரித்து, ஒருபுறத்தில் குழந்தைகளின் பாடப்புத்தகங்கள், மறுபுறத்தில் வாழை இலையில் சுண்டல், சர்க்கரை பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சாதம், அவல், பொரி, கடலை, நாட்டுச் சர்க்கரை, தேங்காய், வாழைப்பழங்களை வைத்து மக்கள் வழிபட்டனர்.
* கள்ளப்பள்ளி பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில் நடந்த ஆயுத பூஜைக்கு, பஞ்சாயத்து தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். குப்பை வாகனங்களுக்கு சிறப்பு வழிபாடு பூஜை செய்யப்பட்டது. துாய்மை பணியாளர்கள், பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், தண்ணீர் திறந்து விடும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
* பிள்ளபாளையம் பஞ்சாயத்து வளாகம் துாய்மை செய்யப்பட்டு, வாழை மரங்கள் கட்டப்பட்டது. தொடர்ந்து பஞ்சாயத்து வாகனங்களுக்கு, மலர்கள் கொண்டு அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடு பூஜை நடந்தது. பஞ்சாயத்து பணியாளர்கள், துாய்மை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

