ADDED : ஏப் 04, 2026 11:12 PM
குளித்தலை: ''நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்,'' என, நா.த.க., ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
கரூர் மாவட்டம், குளித்தலை பஸ் ஸ்டாண்ட் அருகே, நா.த.க., வேட்பாளர் வக்கீல் செல்வ.நன்மாறனை ஆதரித்து, நேற்று ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:
தமிழகத்தில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தமிழகம் தவிர அனைத்து மாநிலங்களிலும், கள் பயன்படுத்தி வருகின்றனர். குளித்தலை பகுதியில் நிலம் வளம் சார்ந்த தொழிற்சாலைகளை உருவாக்குவோம். வாழை அதிகம் சார்ந்து இருந்தால், அது சம்பந்தமான தொழிற்சாலைகளையும், இல்லையென்றால் எருக்கஞ்செடி, கற்றாழை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் தொழிற்சாலைகளை உருவாக்குவோம்.
மாட்டு சாணம் மற்றும் இயற்கை கழிவுகளில் இருந்து கிடைக்கும், இயற்கை எரிவாயு மூலம் தட்டுப்பாடற்ற எரிவாயு சிலிண்டர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீரை கூட தற்போது காசு கொடுத்து வாங்கும் நிலை உள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், தங்குதடையின்றி கிடைக்கும். அனைவருக்கும் தரமான கல்வி, மருத்துவம் அளிக்கப்படும்.
இவ்வாறு பேசினார்.
