/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் அருகே பொது இடத்தில் தடுப்பு சுவர்: இரு பிரிவினர் இடையே பதற்றம்
/
கரூர் அருகே பொது இடத்தில் தடுப்பு சுவர்: இரு பிரிவினர் இடையே பதற்றம்
கரூர் அருகே பொது இடத்தில் தடுப்பு சுவர்: இரு பிரிவினர் இடையே பதற்றம்
கரூர் அருகே பொது இடத்தில் தடுப்பு சுவர்: இரு பிரிவினர் இடையே பதற்றம்
ADDED : ஆக 10, 2025 01:04 AM
கரூர், கரூர் அருகே, பொது இடத்தில் தடுப்பு சுவர் கட்டப்பட்டது தொடர்பாக, இரு தரப்பினர் இடையே பதற்றம் ஏற்பட்டது. இதனால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை அருகே முத்துலாடம்பட்டி பகுதியில், பல்வேறு பிரிவினர் வசிக்கின்றனர். அந்த பகுதியில் உள்ள பட்டாளம்மன், பகவதி அம்மன் கோவிலை சுற்றி, ஒரு பிரிவினர் கடந்த மாதம் தடுப்பு சுவரை கட்டினர்.
இந்நிலையில், மற்றொரு பிரிவினர் கோவிலை சுற்றி, பொது இடத்தில் கட்டப்பட்ட தடுப்பு சுவரை அகற்ற வேண்டும் என, சாலை மறியல் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், தடுப்பு சுவரை அகற்ற மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. அதற்காக, புதிதாக கட்டப்பட்ட சுவரில், கரூர் தாலுகா அலுவலக ஊழியர்கள் நேற்று முன்தினம் நோட்டீஸ் ஒட்டினர்.
இதையடுத்து, நேற்று காலை தடுப்பு சுவர் கட்டப்பட்ட இடத்தில், 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், இரு தரப்பினர் இடையே கரூர் தாலுகா அலுவலகத்தில், ஆர்.டி.ஓ., முகமது பைசல் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. அதில், இரண்டு நாட்களுக்குள் புதிதாக கட்டப்பட்ட தடுப்பு சுவரை, அகற்றி கொள்வதாக அதை கட்டிய ஒரு பிரிவினர் தெரிவித்தனர். அதை, மற்றொரு பிரிவினரும் ஏற்றுக் கொண்டதால், அமைதி பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது.
மேலும், முத்துலாடம்பட்டியில் தடுப்பு சுவர் அகற்றப்படும் வரை, சம்பந்தப்பட்ட பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

