/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கொசு வலைக்கு கை கொடுக்குமா மத்திய அரசு? மீண்டும் கொள்முதல் செய்ய எதிர்பார்ப்பு
/
கொசு வலைக்கு கை கொடுக்குமா மத்திய அரசு? மீண்டும் கொள்முதல் செய்ய எதிர்பார்ப்பு
கொசு வலைக்கு கை கொடுக்குமா மத்திய அரசு? மீண்டும் கொள்முதல் செய்ய எதிர்பார்ப்பு
கொசு வலைக்கு கை கொடுக்குமா மத்திய அரசு? மீண்டும் கொள்முதல் செய்ய எதிர்பார்ப்பு
ADDED : ஆக 25, 2024 07:29 AM
கரூர்: கொசு வலை தொழிலை காப்பாற்ற, மீண்டும் ராணுவம் உள்பட பல துறைகளுக்கு மத்திய அரசு, கொள்முதல் செய்ய வேண்டும்.
கரூரில் ஜவுளி தொழிலுக்கு அடுத்தபடியாக மத்திய, மாநில அரசுகளுக்கு வருவாய் ஈட்டித்தர கூடியதாக பாரம்பரிய கொசு வலை உற்பத்தி தொழில் உள்ளது. இங்கிருந்து, மேற்குவங்கம், உத்தரபிரதேசம், குஜராத், பீஹார், மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு அதிகளவிலும், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தன. ஆண்டுக்கு, 40 கோடி ரூபாய் வரை கரூரில் கொசு வலை வர்த்தகம் நடந்தது. தொழிலில் நேரடியாக, 20,000 பேரும், மறைமுகமாக, 15,000 பேரும் வேலை வாய்ப்பு பெற்றனர்.
அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள தொழிலை காப்பாற்ற, ராணுவம் போன்ற பல துறைகளுக்கு மத்திய அரசு நேரடியாக கொள்முதல் செய்ய கோரிக்கை விடப்பட்டுள்ளது.இதுகுறித்து கரூர் பாரம்பரிய கொசு வலை உற்பத்தியாளர் சங்க ஒருங்கிணைப்பாளர் குப்புராவ் கூறியதாவது:
அடர்ந்த வனப்பகுதியில் எல்லையை காத்து வரும் ராணுவ வீரர்கள் மற்றும் ராணுவ பயன்பாட்டுக்கு, மத்திய அரசு ஒப்பந்த புள்ளிகள் பெற்று அதிகளவில் கொசு வலைகளை வாங்கும். 2,000 முதல் 3,000 பேல்கள் வரை ராணுவத்துக்கு மட்டும் வினியோகம் செய்வோம். இதன்மூலம், 5 கோடி ரூபாய் வரை வர்த்தகம் கிடைத்து வந்தது. கடந்த, 2012க்கு பின், நிறுத்தப்பட்டு விட்டது. மத்திய சுகாதார துறை சார்பில், 10 கோடி ரூபாய் மதிப்புள்ள, 3,000 முதல், 4,000 பேல் வரை, 2013 வரை கொள்முதல் செய்யப்பட்டது.
முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, விலையில்லா அம்மா கொசு வலை திட்டத்தில், மொத்தமாக வாங்கி சென்றனர். தற்போது இந்த திட்டங்களில் கொள்முதல் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. வங்கதேச கொசு வலைகள் கள்ளச்சந்தையில் ஊடுருவது உள்ளிட்ட காரணங்களால், கொசு வலை உற்பத்தி முடங்கியுள்ளது.
மேக் இன் இந்தியா திட்டத்தில் சிறு, குறு தொழில்களுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் தருகிறது. இந்த திட்டத்தில் கரூரில் கொசுவலை கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். மீண்டும் கொசுவலை கொள்முதல் செய்து, ராணுவம், மத்திய சுகாதார துறை, மாநில அரசுகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினார்.

