/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஆவடி பணிமனை ஊழியர்கள் இருவர் அதிரடி 'சஸ்பெண்ட்'
/
ஆவடி பணிமனை ஊழியர்கள் இருவர் அதிரடி 'சஸ்பெண்ட்'
ADDED : மார் 14, 2024 02:13 AM
ஆவடி:ஆவடி பேருந்து பணிமனையில் இருந்து, 152 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில், ஏ.வி.ஐ., எனும் 'ஐ' சீரிஸ் பேருந்துகள், 20க்கும் மேல் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள், போதிய பராமரிப்பில்லாத காரணங்களால், மிக மோசமான நிலையில் இருந்தன. குறிப்பாக, சாலையில் இந்த பேருந்துகளால் அடிக்கடி விபத்துகள் நடந்தன.
மேலும், இந்த பேருந்துகளை இயக்க சொல்லி ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு, நிர்வாகத்தினர் அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில், இரு தினங்களுக்கு முன், ஆவடியில் ஓடும் பேருந்தின் அவல நிலை குறித்து, சமூக ஆர்வலர் ஒருவர், வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவேற்றினார். இந்த வீடியோ பலரால் பகிரப்பட்டது.
இது குறித்து, நம் நாளிதழில் கடந்த 11ம் தேதி படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, மேற்கூறிய 'ஐ' சீரிஸ் பேருந்துகளை சீரமைக்கும் பணி துவங்கியுள்ளன.
இந்த பணிகள், ஆவடி, அம்பத்துார் மற்றும் குரோம்பேட்டை பணிமனைகளில் நடக்கின்றன. மேலும், அலட்சியமாக செயல்பட்ட பிரச்னை இளநிலை பொறியாளர் மற்றும் தொழில்நுட்ப ஊழியர் என, இருவர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து ஆவடி பணிமனை கிளை மேலாளர் கூறுகையில், ''பேருந்துகள் முறையாக தகுதி சான்றிதழ் பெற்ற பின் தான் இயக்கப்படுகின்றன. அதேபோல், ஆவடி பேருந்து நிலையத்திற்கு புதிதாக 11 பேருந்துகள் அரசால் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த பேருந்துகள் வந்ததும், தகுதியற்ற பேருந்துகள், ஒன்றன்பின் ஒன்றாக நிறுத்தப்படும்,'' என்றார்.

